சென்னை: சென்னை திரு.வி.க நகர் தொகுதி, வியாசர்பாடி, கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், திரு.வி.க.நகர் தொகுதியில் உள்ள பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் மற்றும் புரசைவாக்கம் கான்ரான் ஸ்மித் சாலையில் கட்டப்பட்டு வரும் சலவைக் கூடத்தையும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது, மேயர் பிரியா, திரு.வி.க.நகர் எம்எல்ஏ தாயகம் கவி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: நாத்திகர்கள் மற்றும் ஆத்திகர்களை ஒருசேர கொண்டு வந்த அரசு இந்த அரசு. இந்த அரசு வந்த பிறகு 3,117 கோயில்களில் குடமுழுக்கு, 10,880 கோயிலில் உயர் மட்ட தொல்லியல் துறையின் அனுமதி பெற்றுள்ளோம். 826 கோயிலில் ரூ.1306 கோடியில் பணிகள் நடந்துள்ளது. இந்த ஆட்சிக்கு பிறகு தான், மருதமலையில் உலகிலேயே உயரமான 184 அடி சிலை நிறுவப்பட உள்ளது. இறைவனையோ, இறை நம்பிக்கை உள்ளவர்களையோ விமர்சனம் செய்வதோ, எதிர் கருத்தை கூறுவதோ வாடிக்கையாக கொள்ளாதவர்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதுவே இறைவனை வணங்குவதற்கு சமம்.
இவ்வாறு அவர் கூறினார்.