சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார். இது குறித்து பேட்டி அளித்த சத்யபிரத சாகு தெரிவித்ததாவது; வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்.
தமிழ்நாட்டில் 3.10 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். ஜனவரி 1, ஏப்.1, ஜூலை 1, அக்.1-ல் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளராக விண்ணப்பிக்கலாம். நவம்பர் 9-ம் தேதி வாக்குச் சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்படும். அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நவம்பர் 4, 5,18,19 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்படும். கடந்த ஆண்டு 6.2 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 6.11 கோடியாக குறைந்தது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பூங்கொடி வெளியிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 18 லட்சத்து 40 ஆயிரத்து 831 வாக்காளர்கள் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 8,95,483 பேர், பெண் வாக்காளர்கள் 9,45,135 பேர், 3-ம் பாலினத்தவர் 213 பேர் உள்ளனர்.