ஊட்டி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக அடுத்த மாதம் நீலகிரி மாவட்டத்திற்கு வருகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். மேலும், அந்தந்த மாவட்டங்களில் நிலவு வரும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு தடை சட்டம் உள்ளதால், கடந்த பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாமல் உள்ளது. மேலும், கூடலூரில் செக்ஷன் 17 நிலப்பிரச்னை உள்ளது. இதுதவிர மாஸ்டர் பிளான் சட்டம், கட்டிட அனுமதி கிடைப்பதில் தாமதம் உட்பட பல்வேறு பிரச்னைகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது.
இவைகளை களையும் வகையிலும், நீலகிரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு அரசு துறைகள் மூலம் நலத்திட்டங்களை வழங்குவதற்காகவும் அடுத்த மாதம் துவக்கம் அல்லது இரண்டாவது வாரத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டிக்கு வருகிறார். இந்த நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நீலகிரி எம்.பி. ஆ.ராசா தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, எஸ்பி நிஷா, கூடுதல் கலெக்டர் கௌசிக் உட்பட அனைத்து அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முதல்வர் வரும்போது மேற்கொள்ள வேண்டிய நலத்திட்ட பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கவுள்ள நலத்திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், விழா நடத்த மேற்கொள்ள வேண்டிய ஆயுத்த பணிகள் குறித்தும் அதிகாரிகளுன் எம்.பி. ஆ.ராசா விவாதித்தார். இதைத்தொடர்ந்து, அவர் கூறுகையில், ‘‘தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் ஊட்டி வரவுள்ளார். அப்போது பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அரசு அதிகாரிகளுடன் நடத்தப்பட்டது’’ என்றார். கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.