சென்னை: சமூக சேவை மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சமூக சேவை மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிகின்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என இரண்டு பிரிவுகளில் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று சென்னையில் நடக்கிற சுதந்திர தின விழாவில் முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது.
2023ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்காக தஸ்தகீர் (நீலகிரி), தினேஷ்குமார் (திருச்சி), கோபி (ராணிப்பேட்டை), விஜயலட்சுமி (சென்னை), சந்திரலேகா (மதுரை), கவிதா (காஞ்சிபுரம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுக்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசாக தலா ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கி சிறப்பித்தார்.
மேலும், எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த சிறந்த சாகச விளையாட்டு வீரருக்கான சிறப்பு விருது, பதக்கம் மற்றும் பரிசுத்தொகை ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை ராஜசேகருக்கு (செங்கல்பட்டு) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கினார். இந்த விருதுகளை பெற்ற இளைஞர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னை முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.