சென்னை : “இரண்டாம் உலகத் தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு” நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தும் அமைப்புகளுக்கும். நிர்வாகிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இம்மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,”சென்னை வளர்ச்சிக் கழகத்தின் பன்னாட்டுத் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுக் கழகமும் அண்ணா பல்கலைக் கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையமும் இணைந்து நடத்தும் “இரண்டாம் உலகத் தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு” ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள். அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறுவதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
கடந்த ஆண்டும் இதே மாநாடு சிறப்புற நடந்ததும், அதில் உலகளாவிய தமிழ் அறிஞர்களும், சிந்தனையாளர்களும் தங்களது ஆராய்ச்சித் திரட்டுகளைச் சமர்ப்பித்து, நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் பன்முக வளர்ச்சிக்கு வளம் சேர்த்ததை பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் பல்துறைத் தமிழ்ச் சான்றோர்களின் பங்களிப்போடு அதே மாநாடு நடைபெறுவது பெரிதும் வரவேற்புக்குரியதாகும்.
திராவிட இயக்கமும், அதன்வழி தமிழ்ப் பணியாற்றி வரும் நமது திராவிட மாடல் அரசும் தாய் மொழியை வெறும் போற்றுதலுக்குரிய அடையாளமாகப் பார்க்காமல் அதனைச் சமூக மேம்பாட்டிற்கான அறிவியல் செறிவு வாய்ந்த அறிவுக் கருவூலமாகவும் கருதிச் செயல்பட்டு வருகிறது.அதனால்தான் காலத்திற்கேற்ற தகவமைப்புத் திறன் கொண்ட மொழியாக அதனைச் செழுமைப் படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் இந்த அரசு ஊக்குவித்து வருகிறது.
அந்த வகையில் இந்த “இரண்டாம் உலகத் தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு” நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தும் அமைப்புகளுக்கும். நிர்வாகிகளும் எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்வதுடன் இந்த மாநாடு சிறக்க எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.