சென்னை : சோழிங்கநல்லூர், எழில் நகரில் ரூ.69 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட சென்னை நடுநிலைப் பள்ளியின் மழலையர் பிரிவுக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.11.2024) பெருநகர சென்னை மாநகராட்சியும், ஸ்ரீராமசரண் அறக்கட்டளையும் இணைந்து “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ், 69 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட சோழிங்கநல்லூர், எழில் நகரில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியின் மழலையர் பிரிவுக் கட்டடத்தை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, கலந்துரையாடினார்.
ஸ்ரீராமசரண் பொதுநல அறக்கட்டளை, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தரம் வாய்ந்த கல்வியை கொடுப்பதன் மூலம் சமூக மாற்றத்திற்கு உதவுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் மூலம் 17 மாநகராட்சிப் பள்ளிகள், சென்னை மற்றும் தஞ்சையில் 3 அரசுப் பள்ளிகள், 2 மழலையர் பள்ளிகள் என 22 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 25,000 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இந்த அறக்கட்டளை பெண்களுக்கு மாண்டிசோரி முறையில் கல்வி கற்பிப்பதற்கான பயிற்சியையும் நடத்தி வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எழில் நகரில் பயன்படுத்தாமல் பழுதடைந்த நிலையில் இருந்த நடுநிலைப்பள்ளி ஒன்றை மாநகராட்சியின் அனுமதியுடன் அங்குள்ள பெரும்திரளான மக்களுக்கு உதவி செய்யும் வகையில், அப்பள்ளிக் கட்டடம் பெருநகர சென்னை மாநகராட்சியும், ஸ்ரீராமசரண் அறக்கட்டளையும் இணைந்து “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ், 69 இலட்சம் ரூபாய் செலவில் ஐந்து வகுப்பறைகளுடன் மே 2024ல் சீரமைக்கப்பட்டது.
மாண்டிசோரி வகுப்புகளுக்கான உபகரணங்களை பெருநகர சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. மாநகராட்சியின் உரிய அனுமதியுடன் மழலையர் வகுப்பு பிரிவு புதிய வளாகத்தில் உருவாக்கப்பட்டு, சென்னை நடுநிலைப்பள்ளியின் இணைப்பாக எழில் நகரில் ஆகஸ்டு 2024 முதல் செயல்படத் துவங்கியுள்ளது. இப்பள்ளியில் தற்போது 35 மழலையர் இலவசமாக பயின்று வருகின்றனர். மேலும், இப்பள்ளியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் சோழிங்கநல்லூர், எழில் நகரில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியின் மழலையர் பிரிவுக் கட்டடத்தை பார்வையிட்டு, மழலையர் பிரிவு ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், ஆசிரியர்கள் முதலமைச்சர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.