சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகளின் மாநாடு தொடங்கியது.. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், சட்டம் – ஒழுங்கு நிலவரம் போன்றவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மாநாடு இன்றும் நாளையும் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.
முதலில் தனித்தனியாகவும் பிறகு கூட்டாகவும் நடத்தப்படும் மாநாட்டின் நிறைவில், அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியும் திட்டங்களையும் அறிவித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச இருக்கிறார். இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், வனத்துறை உயர் அதிகாரிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களின் செயல்பாடுகள், மக்களிடம் அவை ஏற்படுத்தி உள்ள தாக்கங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கை வேளாண் பட்ஜெட், மானிய கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் போன்றவற்றின் தற்போதைய நிலை குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதே போல மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு நிலவரம் போன்ற அம்சங்கள் குறித்தும் முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்ய உள்ளார்.