Thursday, July 10, 2025
Home செய்திகள்Showinpage “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

by Porselvi

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார். மேலும், 103 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 முதன்மை பதப்படுத்தும் மையங்கள், 18 சேமிப்புக் கிடங்குகள், 3 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 3 வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையங்கள், 8 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், 10 துணை வேளாண் விரிவாக்க மையங்கள், 2 விதை சேமிப்புக் கிடங்குகள், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், 2 ஒருங்கிணைந்த விதைச்சான்று வளாகங்கள், அலுவலகக் கட்டடம், மாணவர் விடுதி மற்றும் தரக்கட்டுப்பாடு/ பகுப்பாய்வகம் உள்ளிட்ட 52 கட்டடங்களை திறந்து வைத்தார்.

வேளாண்மைத் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் வேளாண்மைத் துறைக்கென 5 தனி நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்து, ரூ.1,94,076 கோடியில் பல்வேறு நலத்திட்டங்கள், உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை – உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்து, வேளாண் பெருமக்களின் வருவாயினை உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்திட முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் மண்வளத்தினை அறிந்திட தமிழ் மண் வளம் இணையதளம், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், உழவர் பெருமக்களுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

=> “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தல்

ஊட்டச்சத்துகளை அளிப்பதில் காய்கறிகள், பழங்கள், பயறுவகைகள், சிறு தானியங்கள் பெரும்பங்காற்றுகின்றன. ஊட்டச்சத்து வழங்கும் இந்த விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்னும் புதிய திட்டம் 18 கோடியே 67 இலட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என்று 2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை – உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ், மக்களின் அன்றாட காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாகவும் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற காய்கறி விதைகள் அடங்கிய 15 இலட்சம் காய்கறி விதைத் தொகுப்புகள், விரைவில் பலனளிக்கும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய பழச்செடிகள் அடங்கிய 9 இலட்சம் பழச்செடி தொகுப்புகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகள் அடங்கிய ஒரு இலட்சம் பயறு வகை விதைத் தொகுப்புகள் ஆகியவற்றை விவசாய பெருமக்களுக்கு வழங்கும் வகையில், 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கி, இப்புதிய திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

=> திறந்து வைக்கப்பட்ட புதிய வேளாண் கட்டடங்களின் விவரங்கள் :

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் – குப்பநத்தம் மற்றும் படவேடு ஆகிய இடங்களில் 8 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் 2 முதன்மை பதப்படுத்தும் மையங்கள்;

தென்காசி மாவட்டம் – சங்கரன்கோவில், பாவூர் சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் – கழுகுமலை, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், கரூர் மாவட்டம் – கரூர், அரியலூர் மாவட்டம் – ஆண்டிமடம், காஞ்சிபுரம் மாவட்டம் -உத்திரமேரூர், சுங்குவார்சத்திரம், திருப்பத்தூர் மாவட்டம் – திருப்பத்தூர், வேலூர் மாவட்டம் – குடியாத்தம் ஆகிய மாவட்டங்களில் 28 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் 14 சேமிப்பு கிடங்குகள்;

கோயம்புத்தூர் மாவட்டம் – ஆனைமலை, நேகமம், காரமடை, மலையடிப்பாளையம் ஆகிய இடங்களில் விற்பனைக்கூட நிதியிலிருந்து 8 கோடி ரூபாய் செலவில் 1000 மெ.டன். கொள்ளளவு கொண்ட 4 கிடங்குகள்;

தென்காசி மாவட்டம் – ஆலங்குளம், திருவண்ணாமலை மாவட்டம் – ஆதமங்கலபுதூர் மற்றும் நாயுடுமங்கலம் ஆகிய இடங்களில் 14 கோடியே 18 இலட்சம் ரூபாய் செலவில் 3 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்;

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் 2 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் 3 வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையங்கள்;

அரியலூர் மாவட்டம் – தா.பழூர், வேலூர் மாவட்டம் – வேலூர், புதுக்கோட்டை மாவட்டம் – புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – காரியாப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் – நாங்குநேரி, கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், திருவண்ணாமலை மாவட்டம் – வந்தவாசி, கிருஷ்ணகிரி மாவட்டம் – கெலமங்கலம் ஆகிய மாவட்டங்களில் 22 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் 8 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள்;

காஞ்சிபுரம் மாவட்டம் – பழந்தண்டலம், களக்காட்டூர், தேனி மாவட்டம் – தேவதானப்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் – அணைக்கரை, திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம், திருப்பூர் மாவட்டம் – கோவிந்தாபுரம், அரியலூர் மாவட்டம் – விக்கிரமங்கலம், தென்காசி மாவட்டம் – அச்சன்புதூர், புதுக்கோட்டை மாவட்டம் – கீரமங்கலம் ஆகிய இடங்களில் 5 கோடி ரூபாய் செலவில் 10 துணை வேளாண் விரிவாக்க மையங்கள்;

கடலூர் மாவட்டம் – மிராளூர் அரசு விதைப் பண்ணை, கள்ளக்குறிச்சி மாவட்டம் – வடக்கனந்தல் அரசு விதைப் பண்ணை ஆகிய இடங்களில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் 250 மெ.டன் கொள்ளளவு கொண்ட விதை சேமிப்புக் கிடங்குகள், மதுரை மாவட்டம் – மேலூரில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம்;

விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறைக்காக திருப்பூர் மாவட்டம் – பொங்கலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் – பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 5 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த விதைச்சான்று வளாகங்கள்;

வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் திருநெல்வேலியில் அரசு இயந்திரக் கலப்பை பணிமனை அலுவலகக் கட்டடம்;

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் – கிருஷ்ணகிரி மற்றும் தளி ஆகிய இடங்களில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்களில் 5 கோடி ரூபாய் செலவில் புதிய மாணவர் விடுதி மற்றும் தரக்கட்டுப்பாடு / பகுப்பாய்வகம்;

என மொத்தம் 103 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 52 வேளாண் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் த.ஆபிரகாம், இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர் பா.முருகேஷ், இ.ஆ.ப., தோட்டக்கலைத் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முனைவர் இரா. முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi