திருப்பத்தூர் : ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்தாலும் தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க முடியவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், “தோல் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி மூலமாக வருவாயும் ஈட்டி வேலை வாய்ப்பும் அளிக்கிறது திருப்பத்தூர் மாவட்டம். தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதிக திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மக்கள் அன்பை வாரி வழங்கி வருகின்றனர். 2026 மட்டுமல்ல 31 ஆக இருந்தாலும் 36 ஆக இருந்தாலும் என்றைக்கும் நாம்தான் நாட்டை ஆளப்போகிறோம். தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறையில்லாத கடந்தகால ஆட்சியாளர்களால் சீரழித்த வளர்ச்சியை திமுக அரசு சீர்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டுக்கு ஓர வஞ்சனை செய்கிறது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்தாலும் தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. சமூக முன்னேற்ற குறியீடுகளிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது. நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.21%ஆக உள்ளது. பணவீக்கம் குறைந்த மாநிலம் தமிழ்நாடு. நாட்டின் அதிக நகரமயமாக்கல் நகரமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. தேசிய சராசரி வளர்ச்சியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் பல ஆண்டுகளாக அதிகமாக உள்ளது.கோட்டையில் மட்டும் இருந்து நான் பணியை செய்யவில்லை, தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு செல்கிறேன்.
விடுபட்ட மகளிருக்கு ஆகஸ்ட், செப்டம்பருக்குள் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலங்காயம் நெக்னாமலை பகுதியில் ரூ.30 கோடியில் 7 கி.மீ. நீள சாலை அமைக்கப்படும். குமாரமங்கலத்தில் ரூ.6 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். நல்லகுண்டாவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்; அதன் மூலம் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும். திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் உள்ள இடத்தில் ரூ.18 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும். ஆம்பூரில் ரூ.1 கோடியில் புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும்.
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் 2030க்குள் 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். மக்களை பற்றி கவலைப்படாமல் மதத்தை பற்றி கவலைப்படுகிறது பாஜக. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்குத்தான் இப்போது ஆபத்து. சமூக நல்லிணக்கத்தோடு தமிழ்நாடு இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு மதவாத அரசியல் செய்பவர்களுக்கு பற்றி எரிகிறது. மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால் அங்கேயும் திமுக ஸ்கோர் செய்துள்ளது. அண்ணா பெயரையே அதிமுகவினர் அடமானம் வைத்துவிட்டனர்,”இவ்வாறு பேசினார்.