சென்னை: தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும்,
எண்ணிக்கையிலான மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா நாட்டிற்கு 17 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா. பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள்உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.இதன்மூலம் மொத்தம் 1300 கோடி ரூபாய் முதலீட்டில் 4600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோ சென்றடைந்தார். சிகாகோவில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க, அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. அதே போல் தமிழ்நாட்டில் ரூ.200 கோடி முதலீடு செய்ய மின்மேலாண்மை மற்றும் ஹைட்ரோலிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான ஈட்டன் நிறுவனத்துடன் சிகாகோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் (Global Utility Engineering Centre) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.