சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.9.2023) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் புத்தொழில் சூழமைவை மேம்படுத்தும் வகையில் 50-க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை உள்ளடக்கிய “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023”னை வெளியிட்டார். மேலும், தமிழ்நாடு பட்டியலினத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் 8 நிறுவனங்களுக்கு 10 கோடியே 85 இலட்சம் ரூபாய் பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்.
தமிழ்நாட்டின் புத்தொழில் சூழமைவை (Startup Eco System) மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டினை மிகச் சிறந்த புத்தொழில் சூழமைவு கொண்ட இடங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023” உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையானது 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் என்ற இலக்கினை அடைவதில் புத்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பினை ஊக்குவிப்பதற்கும் அடிப்படையாக இருக்கும்.
இப்புதிய புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையானது, தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களின் உருவாக்கத்தை அதிகரிப்பதற்கும், அந்நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு உறுதுணையாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு (GDP) மற்றும் சமூக மூலதனம் (Social Capital) இரண்டிலும் அவற்றின் பங்களிப்புகளை அதிகரிப்பதற்கும் உந்து சக்தியாக இருக்கும்.
புத்தொழில் சார்ந்த அறிவாற்றலை மேம்படுத்துதல், மாநிலத்தின் புத்தாக்க சூழமைவினை வலுப்படுத்துதல், முதலீட்டு சூழமைவினை வலுப்படுத்துதல், சந்தை அணுகுதலுக்கு தேவையான வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்முனைவு தளம் சார்ந்த செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைத்தல், புத்தொழில் ஆதரவு சேவை மையங்களை அமைத்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த புத்தொழில் முனைவு வளர்ச்சியினை உறுதி செய்தல் ஆகிய ஏழு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, 50-க்கும் மேற்பட்ட செயல்திட்டங்களுடன் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.