Sunday, September 24, 2023
Home » மணிப்பூரும் அரியானாவும் பலியானதை போல, மொத்த இந்தியாவும் பலியாகிடாமல் தடுக்க I.N.D.I.A. கூட்டணி வெல்ல வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மணிப்பூரும் அரியானாவும் பலியானதை போல, மொத்த இந்தியாவும் பலியாகிடாமல் தடுக்க I.N.D.I.A. கூட்டணி வெல்ல வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Porselvi
Published: Last Updated on

சென்னை : “ஒன்றிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தியாவை யாராலும் காக்க முடியாது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி “Speaking for இந்தியா” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் ஆடியோ சீரிஸ் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆடியோ பதிவு http://speaking4india.com என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆடியோவில், தமிழகத்தின் முதல்வராக – இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியான திமுகவின் தலைவராக இருக்கும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், உங்களில் ஒருவனாக, இந்தியாவுக்காகப் பேசப் போவதுதான் இந்த ‘பாட்காஸ்ட் சீரிஸின்’ நோக்கம்.இந்தியாவுக்காக எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். காலம் காலமாக, இந்திய மக்கள் அனைவரும் போற்றிப் பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பையே சிதைக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது.

2014-ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி – தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த மக்கள் நல வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தருவோம்.

ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு.

உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம்.

சொந்த வீடு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும்.

இப்படி எல்லாம் வாயால் வடை சுட்டார்கள். பத்து ஆண்டு ஆகப் போகிறது. ஆனால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ‘குஜராத் மாடல்’ என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி மாடல், இப்போது என்ன ‘மாடல்’ என்றே தெரியாமல் முடியப் போகிறது. திராவிட மாடல் என்னென்ன சாதனைகளைத் தமிழகத்தில் செய்திருக்கிறார்கள் என்று நாம் புள்ளிவிவரத்தோடு அடுக்கிய பிறகு, அவர்கள் பெருமையாகப் பேசிவந்த ‘குஜராத் மாடல்’ பற்றி, இப்போது மறந்தும் கூட பேசுவதில்லை.

இது ஒரு பக்கம் என்றால் – இன்னொரு பக்கம், நன்றாக இருந்த இந்தியாவின் பொதுத்துறை கட்டமைப்பையும் சீரழித்து, சின்னாபின்னமாக்கிவிட்டார்கள். தங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு அதை மடைமாற்றும் செயலை மட்டுமே செய்துகொண்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது – சிலரின் நலனாக சுருங்கிவிட்டது. அரசுக்குச் சொந்தமான ‘ஏர் இந்தியா’ நிறுவனம், இப்போது தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது.

இந்தியா முழுவதும் இருக்கும் விமான நிலையங்களும், துறைமுகங்களும் தனியார் கைக்குப் போகிறது. பிரதமர் மோடி சொன்னதுபோல், உழவர்களின் வருமானமும் இரண்டு மடங்கு ஆகவில்லை; ஏழை பாழைகளின் வாழ்க்கைத்தரமும் உயரவில்லை. இதை எல்லாம் மறைப்பதற்காகத்தான் மதவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி, அதில் குளிர் காயப் பார்க்கிறார்கள்.

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. விதைத்த வன்முறை, வெறுப்பு விதையானது, 2023-ஆம் ஆண்டு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைப் பற்றி எரிய வைத்திருக்கிறது. ஹரியானாவில் மூட்டிவிடப்பட்ட மதவெறித் தீ, இன்றைக்கு அப்பாவி மக்களின் உயிரையும் சொத்துகளையும் காவு வாங்குகிறது. இதற்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு, கூட்டாட்சித் தத்துவத்துக்கு மக்களாட்சி மாண்புக்கு எப்போதெல்லாம் ஆபத்து வந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் முன்னணிப் படையாக திமுக நின்றிருக்கிறது. இதைத்தான் “You should take the DMK as the spearhead of the opposition to the unitary nature…” என்று அண்ணா மாநிலங்களவையில் முழங்கி இருக்கிறார்..“தமிழகத்தில் கால் பதித்து நின்று இந்தியாவுக்காகப் பேசும் கட்சியாக நமது இயக்கம் இயங்க வேண்டும்” என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், ஆட்சி மாற்றங்களையே உருவாக்கிக் காட்டி இருக்கிறார் தலைவர் கருணாநிதி. பிரதமர்களை – குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய இயக்கம் திமுக இப்போது மீண்டும் ஒரு வரலாற்றுக் கடமை நம்மை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது.

2024 தேர்தல் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டிய தேர்தல். 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில், மாநிலங்களை அழிக்கின்ற படுபாதகமான பல மோசடிகள் செய்யப்பட்டிருக்கிறது.மாநிலங்களின் நிதி உரிமையை முழுவதுமாக பறித்துவிட்டது ஜிஎஸ்டி. இதனால், தமிழகத்துக்கு நிதி சுயாட்சி உரிமை பறிபோனதுதான் மிச்சம். ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு அதை ஏற்கவில்லை.

ஒன்றிய அரசுக்கு வரியாக, தமிழகம் ஏராளமான நிதியை ஆண்டுதோறும் தருகிறது. அதே நேரத்தில், தமிழகம் ஒன்றிய அரசுக்கு வரி வருவாயாக செலுத்துகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் ஈடாக, 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது.2014 முதல் கடந்த ஆண்டு வரை நம் மாநிலம் ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி 5 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், வரிப் பகிர்வாக, நமக்குத் திரும்ப கிடைத்தது என்னவோ, வெறும் 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய்தான்.

பெற்றதை முழுவதுமாகத் தர முடியாது என்று சொன்னால் பாஜக ஆளுகிற மாநிலத்துக்கு மட்டும் எப்படி கொடுக்க முடிகிறது? பாஜக ஆளும் ஒரு மாநிலம் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய்தான் வரியாகக் கொடுத்திருக்கிறது. ஆனால் வரிப் பகிர்வாக, 9 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. இதைத்தான் ஓரவஞ்சனை என்று சொல்கிறோம். இவ்வாறு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் ஆட்சியாக ஒன்றிய பாஜக ஆட்சி இருக்கிறது.

ஒன்றிய நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழகம் தொடர்ந்து பெரும் நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது. 12-ஆவது நிதிக்குழுவில் 5.305 விழுக்காடாக இருந்த நிதி ஒதுக்கீடு, 15-ஆவது நிதிக் குழுவில் 4.079 விழுக்காடாக குறைந்திருக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் இழக்கின்ற நிதி கொஞ்சம் நஞ்சமல்ல. நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய 72,311 கோடி ரூபாயை நாம் இழந்திருக்கிறோம்.

பல திட்டங்களுக்கான பெரும் பங்கு மாநில அரசால்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கான பெயர் மட்டும் ஒன்றிய அரசுக்கு வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழகத்துக்கு முத்திரைத் திட்டங்கள் என்று ஒன்று கூட இந்த 9 வருடங்களில் தரவில்லை. மாநிலங்களைப் பழிவாங்குகிற அரசாக இப்போதைய ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது.மக்களுக்கு நேரடியாக நன்மை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிற மாநில அரசுகளை சிதைப்பதையே நோக்கமாக வைத்திருக்கிறார்கள். இது மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் சிதைக்கப் பார்க்கிறார்கள்.

Social justice, Secular politics, Socialism, Equity, Social harmony, State autonomy, Federalism, Unity in diversity – இவை உயிர்வாழும் இந்தியாதான் உண்மையான இந்தியா. இணையற்ற இந்தியா! அப்படிப்பட்ட இந்தியாவை மீட்டெடுக்கத்தான் இண்டியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த இண்டியா கூட்டணிதான்.பாஜகவின் வகுப்புவாத, வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூரும், ஹரியானாவும் பலியானதைப்போல மொத்த இந்தியாவும் பலியாகிவிடாமல் தடுக்க வேண்டும் என்றால், இண்டியா கூட்டணி வெல்ல வேண்டும்.

இதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் பாட்னாவிலும், பெங்களூரிலும், மும்பையிலும் நடந்துள்ளன. பன்முகத்தன்மை கொண்ட பண்பட்ட இந்தியாவைச் செதுக்குவோம், இந்தியாவைக் காப்போம். அதற்காக முதலில் இந்தியாவுக்காகப் பேசுவோம். இனி இது M.K.STALIN குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலாக அமையும். எனது குரலை இந்தியாவின் குரலாக எல்லோரிடத்திலும் எடுத்துச் செல்லுங்கள்! வெல்க இண்டியா” என்று அதில் முதல்வர் பேசியுள்ளார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?