சென்னை: கலைஞர், தமிழக சட்டப்பேரவையில் 1971-72ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அளித்தபோது,‘‘நகர்ப்புரங்களின் வசதி வாய்ப்புகளை கிராமப்புரத்து மக்கள் பெற்றிட வேண்டும் என்னும் குன்றா ஆர்வத்துடன் இந்த அரசு செயல்படும்” என்று குறிப்பிட்டு கிராமப்புர வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார்கள். கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கிராமப்புரங்களின் முன்னேற்றத்திற்காக சாலைகள், குடிநீர் திட்டங்கள், குடியிருப்புகள், பெரியார் நினைவு சமத்துவபுரம், முதலான பல்வேறு முற்போக்கு திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். இந்த திட்டங்கள் இந்திய மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டுகின்றன.
உள்ளாட்சி அமைப்புகள் சுயமாக செயல்படவும், மேலிட அனுமதிகளை பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்த்திடவும் கிராம ஊராட்சிகளுக்கு நிருவாக அனுமதி அளிக்கும் வரம்பு ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சம் ஆகவும்; வட்டார ஊராட்சிக்கான அனுமதி வரம்பு ரூ.10 லட்சம் என்பதை ரூ.20 லட்சம் ஆகவும்; மாவட்ட ஊராட்சிகளுக்கான அனுமதி வரம்பு ரூ.20 லட்சம் என்பதை ரூ.50 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புரங்களை ஒட்டியுள்ள 690 ஊராட்சிகளுக்கு, தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.69 கோடியும் மலைப்பிரதேசங்களிலுள்ள 278 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.30 கோடியும் சிறப்பு மானியமாக வழங்கப்பட்டு இந்த ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
ஊராட்சிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பிற துறைகளுடன் ஊராட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவும் 600 கிராம செயலகங்கள் கட்டுவதற்கு அரசாணை வழங்கப்பட்டு, 600 கிராம செயலகங்களுக்கான கட்டுமான பணிகளும் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டமானது, ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 100 நாட்களுக்கு திறன் சாரா வேலை வாய்ப்பினை வழங்க உறுதி செய்கிறது. இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2021-22 ம் ஆண்டில் 88,269 மாற்றுத் திறனாளிகளுக்கும், 2022-23ம் ஆண்டில் 98,567 மாற்றுத்திறனாளிகள் என எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், 2023-24ம் ஆண்டில் 1,16,622 மாற்றுத் திறனாளிகளுக்கும், 2024-25ம் ஆண்டில் 1,12,019 மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைகள் வழங்கி தேசிய அளவில் முதலிடங்கள் பெற்று தமிழ்நாடு பாராட்டுகளை பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல; 2021-22ம் ஆண்டு முதல் தொடர்ந்து பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கியதிலும் தேசிய அளவில் 3ம் இடம் பெற்றுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் 2021-22 முதல் 2024-25 வரை 10,187 கிராம ஊராட்சிகளில் 69,760 பணிகள் ரூ.4,277.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் 7,924 நூலகங்கள் ரூ.176.02 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளன. ஊரக பகுதிகளில் 3,194 சிறுபாசன ஏரிகள் ரூ.213.07 கோடி மதிப்பீட்டில் மாநில நிதி மூலம் புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகளின் மூலம் 706 சிறுபாசன ஏரிகள் ரூ.45.39 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல்வர், ரூ.8,000 கோடி செலவில் 20,000 கிலோமீட்டர் கிராமப்புர சாலைகளை மேம்படுத்த அனுமதி அளித்துள்ளார். இதுவரை, 12,572 கிலோமீட்டர் நீளமுள்ள 9,696 சாலைகள் ரூ.4,609 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 6,671 கி.மீ சாலைகள் ரூ.3,529 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் ஒன்றிய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற நிதிப் பகிர்வுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 4,182 கிலோ மீட்டர் நீளமுள்ள 947சாலைப்பணிகளும் 83 புதிய பாலங்களும் ரூ.3,061 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டுள்ளன. நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், 505 கி.மீ. நீளமுள்ள 283 சாலைகள் மற்றும் 308 பாலங்கள் ரூ.1,182 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புரத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் 678.62 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.267 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1,990 கி.மீ. நீளமுள்ள சாலைப்பணிகள் ரூ.627 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநில சிறப்பு நிதியின் கீழ் 34 உயர்மட்ட பாலங்கள் 18 மாவட்டங்களில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டக்கூறு நிதியின் கீழ், 119 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் ரூ.578.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் புதிய முயற்சியாக கிராமப்புரங்களில் சமத்துவத்தை மேம்படுத்தும் விதமாக 16 மாவட்டங்களில் ரூ.42.90 கோடி மதிப்பீட்டில் 22 எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படுகின்றன. கலைஞரின் கனவு திட்டத்தின்படி 2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.7,000 கோடி அனுமதிக்கப்பட்டு 72,081 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளின் கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. தேவைப்படும் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் 2024-25 ம் ஆண்டில் ரூ. 1041.32 கோடி மதிப்பீட்டில் 1,48,634 வீடுகளை சீரமைத்திட அரசு நிதி உதவி வழங்கியுள்ளது.
ரூ.261 கோடியில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில் சென்னையை ஒட்டியுள்ள 3 மாவட்டங்களிலும், தூத்துக்குடியை ஒட்டிய 4 மாவட்டங்களிலும் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் முழுவதும் பாதிக்கப்பட்ட 3,591 வீடுகளை மீண்டும் கட்ட தலா ரூ.4 லட்சம், மற்றும் 1,057 எண்ணிக்கை பகுதி சேதமடைந்த வீடுகளை புதுப்பித்திட வீடு ஒன்றிற்கு ரூ.2 லட்சம் வரை மொத்தம் ரூ.168.14 கோடி முதல்வரின் கருணை உள்ளத்தால் மொத்தமாக 4,648 வீடுகள் அனுமதிக்கப்பட்டு 4,159 வீடுகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள 489 வீடுகள் முன்னேற்றத்தில் உள்ளன. அனைத்து ஊரக குடும்பங்களும் கழிப்பறை வசதி பெறுவதை நோக்கமாக கொண்டு. 4 ஆண்டுகளில் 3,38,357 தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்ட போதிய இடவசதி இல்லாதவர்கள் பயன்பாட்டிற்காக 2,123 சமுதாய சுகாதார வளாகங்கள் ரூ.127.05 கோடியில் கட்டப்பட்டுள்ளன. பொது இடங்கள், நூலகங்கள், பள்ளிகள், அரசுக் கட்டடங்கள் போன்றவற்றின் அருகில் 6,684 சிறிய சமுதாய சுகாதார வளாகங்கள் ரூ.195.43 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இப்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் ஆட்சி பொறுப்பேற்றது முதல் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உயர்த்தி நிலைநிறுத்திடும் உன்னத லட்சியத்துடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலமாகத் தமிழ்நாட்டில் நிறைவேற்றி வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், நமக்கு நாமே திட்டம், சுகாதார திட்டங்கள், குடிநீர் இணைப்பு திட்டம் முதலான பல்வேறு திட்டங்களால் தமிழ்நாட்டின் கிராமப்புரங்கள், நகர்ப்புரங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற்று இந்திய மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்கிறது. ஒன்றிய அரசின் விருதுகளையும், பத்திரிகைகளின் பாராட்டுகளையும் தொடர்ந்து பெற்று வருகிறது என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும்.