சென்னை: நீதிமன்றங்களுடன் இணைந்து, வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, உடனடியாக தண்டனை வாங்கித் தந்தால் மட்டும்தான் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்று போலீஸ் அதிகாரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த இரு நாட்களாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன் ஒரு கட்டமாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கவேண்டும். குற்றங்கள் குறைப்பதாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதாக உங்கள் பணி அமையவேண்டும். போதை மருந்து மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமில்லை, எதிர்கால வளர்ச்சிக்கும் அது தடையாக இருக்கிறது. மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு குட்கா, பான்மசாலா போதைப்பொருளின் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். குற்றப்பத்திரிகை பதியப்பட்டு, நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படாத வழக்குகளை உடனடியாக நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லவேண்டும்.
நீதிமன்றங்களுடன் இணைந்து இந்த பணிகளை துரிதப்படுத்தி, உடனடியாக தண்டனை வாங்கித் தந்தால் மட்டும்தான் குற்றச்செயல்களை தடுக்க முடியும். பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு வரும்போது, அவர்களை நீங்கள் நடத்துகின்ற விதத்தை பொறுத்துத்தான் காவல்துறையின் பிம்பம் கட்டமைக்கப்படும். அதை உணர்ந்து பொறுப்புடனும், கனிவுடனும் நடந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் மிகவும் நம்பிக்கையோடு எனக்கு மனுக்களை அனுப்புகிறார்கள். எனவே, சட்டப்படி மேல்நடவடிக்கை எடுத்து, அந்த விவரங்களை மனுதாரருக்கு தெரிவிக்கவேண்டும். இது பற்றி நானே மனுதாரர்களிடம் பேசித் தெரிந்துகொள்ளப் போகிறேன். காவல் துறையினரால் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ள இருக்கிறேன். அதனால், ஒவ்வொரு மனு மீதும், சரியான விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த வாரம் வேளாங்கண்ணி கொடியேற்றம் நடக்கப் போகிறது. அங்கு வரும் பக்தர்கள் திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள ஏதுவாக, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கையாண்டு எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல், கண்காணிக்கவேண்டும். அடுத்த மாதம், பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை நிறுவும் இடங்கள், சிலை ஊர்வலங்கள் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்தி பிரச்சினை ஏற்படாமல் நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். மாநிலத்தின் அமைதியைக் காக்கும் பணியை சிறப்பாக செய்துகொண்டு வருகிறீர்கள். இனியும் அது தொடரட்டும், மேலும் மேம்படட்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.