பெரம்பூர்: தமிழகத்தில் பாஜ சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பெரும்பாலான கூட்டங்களில் பட்ஜெட் குறித்து எந்த ஒரு கருத்தையும் விவாதிக்காமல் முழுக்க முழுக்க தமிழக அரசையும், தனிப்பட்ட முறையில் தமிழக முதல்வரையும் பாஜவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி மாலை, பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.கே.பி நகர் 13வது மத்திய குறுக்கு தெருவில் பாஜ சார்பில், பட்ஜெட் விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கராத்தே தியாகராஜன், வழக்கறிஞர் பால் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பேசிய மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கண்ணன் என்பவர், தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் கடுமையாக தரக்குறைவான வார்த்தைகளால் பேசினார்.
மேலும் தனிப்பட்ட முறையில் தமிழக முதல்வரை கொச்சைப்படுத்தி பேசினார். இதற்கு சமூக வலைதளங்களில் பலத்த கண்டனம் எழுந்தன. இதையடுத்து, எம்கேபி நகர் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாரின் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி, நெல்லையில் பதுங்கி இருந்த வியாசர்பாடி காந்தி நகர் 6வது தெருவை சேர்ந்த கண்ணனை (45) நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையி அடைத்தனர்.