சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அன்னம் தரும் அமுதக்கரங்கள் திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அளிக்கப்பட்டும் வரும் காலை உணவு வழங்கும் திட்டத்தின் 100வது நாளில் அமைச்சர் எ.வ.வேலும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மக்களுக்கு உணவுகளை வழங்கினார். 100வது நாள் நிகழ்ச்சி நேற்று கொளத்தூர் மேற்கு பகுதி, 69வது வார்டு, ஜி.கே.எம். காலனி, 13வது தெரு மற்றும் 64வது வார்டு, ராஜாஜி நகர், காமராஜ் தெரு ஆகிய இடங்களில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி, கடந்த 100 நாட்களாக அமுதக்கரங்களுக்காக உழைத்த நிர்வாகிகளை கவுரவிக்கும் விதமாக 127 பேருக்கு கணையாழி மற்றும் புத்தாடைகள் வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” பெயரில் ஒரு நாளைக்கு 1000 பேருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு காலை உணவுகளை வழங்கி வருகிறார்.
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் கொளத்தூர் நம்பர் ஒன் தொகுதியாக உள்ளது. அமைச்சர் சேகர்பாபு பேசுகையில் ‘‘உணர்ச்சி கலந்த கூட்டம் கிழக்கு மாவட்டத்தில் இருப்பதால் தான் சொல்கிறேன், இந்த அமுத கரங்கள் நிகழ்ச்சி ஓராண்டுகள் தொடர்ந்து நடக்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் கிழக்கு மாவட்ட தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றால் தான் 100க்கு 100 வெற்றி கிடைக்கும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வாரிய தலைவர் ரங்கநாதன், பகுதி செயலாளர் நாகராஜன், ஐசிஎப்.வ.முரளிதரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார், மண்டலக்குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் தேவஜவகர், வட்டச்செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், முருகன், மாநில, மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.