*அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தல்
அரியலூர் : முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் சிற்றுண்டி உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார்.தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் ஊரக பகுதிகளில் உள்ள 471 அரசு தொடக்கப்பள்ளிகளில் 25,956 மாணவ, மாணவியர்களுக்கும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 6 அரசு தொடக்கப்பள்ளிகளில் 324 மாணவ, மாணவியர்களுக்கும், அரியலூர் நகராட்சியில் உள்ள 2 அரசு தொடக்கப்பள்ளிகளில் 177 மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் 479 பள்ளிகளில் பயிலும், 26,457 மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் அரியலூர் ஒன்றியம், தவுத்தாய்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம் அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு மாணவர்களின் வருகை விவரம், காலை உணவு மாணவர்களுக்கு வழங்கப்படும் நேரம், முந்தைய நாட்களில் வழங்கப்பட்ட உணவுகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தார்.
மாணவர்களிடம் உணவின் சுவை குறித்தும், உணவு ஒரு முறைக்கு மேல் மீண்டும் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களுக்கு உணவினை தொடர்ந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்து, உரிய நேரத்தில் வழங்கிட வேண்டும். சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் உணவு தயார் செய்யப்படும் சமையல் கூடத்தினை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு விவரத்தினை கேட்டறிந்ததுடன் பொருட்களை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ரெங்கசமுத்திரம் உடையான் ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு பணிக்கு வருகைப் புரிந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை விவரம் குறித்தும், மேலும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரம் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை உரிய காலத்திற்குள் விரைவாக செய்து முடிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் அரியலூர் ஆர்டிஓ ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.