சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.6.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான செம்மொழிநாள் விழாவில், 2025-ஆம் ஆண்டுக்கான கலைஞர் செம்மொழித்தமிழ் விருது, செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 5 பேருக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை ஆணைகளை வழங்கி, தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரினையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ் வினையடிகள் – வரலாற்று மொழியியல் ஆய்வு மற்றும் சங்க இலக்கியச் சொல்வளம் ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.
தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, பலமொழிகளுக்குத் தாய், பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமின்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு-பங்களிப்பு, மொழிக்கோட்பாடு ஆகிய தகுதிப்பாடுகளைக் கொண்ட தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுதந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான
ஜுன் திங்கள் 3ஆம் நாள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி, இன்று (3.6.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான இன்று “செம்மொழி நாள் விழா” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்மொழி உருவாக்கம், தொல்லியல் சான்றுகள், செம்மொழித் தகுதி, 1815 முதல் 1950 வரை வெளிவந்த செவ்வியல் நூல்கள் 2021 முதல் 2025 வரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்ட கலைஞர் கருவூலம் மற்றும் ஒளிப்படங்கள் கொண்டு கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, “முத்தமிழறிஞரின் முத்தமிழ்” இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியும், “எல்லோர்க்கும் எல்லாமுமாய்” என்ற தலைப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறித்த ஆவணப்படமும், செய்தித்துறையால் உருவாக்கப்பட்ட “செம்மொழி நாள்” குறித்த குறும்படமும் திரையிடப்பட்டன.
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்களுக்கு, 2025-ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினையும், விருதுத் தொகையாக 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், கலைஞர் மு. கருணாநிதி திருவுருவச் சிலையும் வழங்கி சிறப்பித்தார். முனைவர் தாயம்மாள் அறவாணன் 23.05.1944-இல் கன்னியாகுமரி சேந்தன்புதூர் என்ற ஊரில் பிறந்தவர். சுசீந்திரம் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றவர். தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து, அதே கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டமும், கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டமும் பெற்றவர். ‘குழந்தை இலக்கியம் – ஒரு பகுப்பாய்வு’ தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டத்தைப் பெற்ற சிறப்புக்குரியவர்.
செம்மொழிநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள்
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்
செம்மொழி நாளையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற திண்டுக்கல் மாவட்டம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவன் சா. முஹம்மது அர்ஷத்துக்கு 15,000/- ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்ற விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி பா. தமிழரசிக்கு 10,000/- ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற தருமபுரி மாவட்டம், அரசு மாதிரிப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி மு.கோகிலாவுக்கு 7,000/- ரூபாயும்; கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மதுரை மாவட்டம், பாரதியார் பதின்ம மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவன் செ. அழகுபாண்டிக்கு 15,000/- ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம், விசயலெட்சுமி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவன் ர. தரணீஷ்க்கு 10,000/- ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற தஞ்சாவூர் மாவட்டம், ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவி பி. கீர்த்தனாவுக்கு மூன்றாம் பரிசாக 7,000/- ரூபாயும்;
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்
கல்லூரி மாணாக்கர்களுக்கு மாநில அளவில் நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கன்னியாகுமரி மாவட்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி நா.சீ. நந்தனாவுக்கு 15,000/- ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்ற தருமபுரி மாவட்டம், வருவான் வடிவேலன் கல்வியியல் கல்லூரி மாணவர் த. தங்கமுத்துக்கு 10,000/- ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற புதுக்கோட்டை மாவட்டம், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவி வீ. ஜெயலட்சுமிக்கு ரூ.7,000/- ரூபாயும்;
கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற திண்டுக்கல் மாவட்டம், ஜி.டி.என். கலைக் கல்லூரி மாணவர் க. விஜயகாந்த்துக்கு 15,000/-ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்ற தென்காசி மாவட்டம், ஸ்டெல்லா மேரீஸ் கல்வியியல் கல்லூரி மாணவி இல. இலக்கியாவுக்கு 10,000/- ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற திருநெல்வேலி மாவட்டம், யுனிவர்ஸ் கல்வியியல் கல்லூரி மாணவி அ. பிரியதர்ஷினிக்கு 7,000/- ரூபாயும், பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்பட்டன.
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை
தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக தற்போது மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை தமிழறிஞர்களுக்கு ரூ.4,500/-லிருந்து ரூ.7,500/-ஆகவும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.3,500/-லிருந்து ரூ.7,500/-ஆகவும், எல்லைக்காவலர்களுக்கு ரூ.5,500/-லிருந்து ரூ.7,500/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என 2025-2026ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது உதவித்தொகை பெற்று வரும் தமிழறிஞர்கள்
217 பேருக்கும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 621 பேருக்கும், எல்லைக்காவலர்கள் 60 பேர் என மொத்தம் 898 பேருக்கும் உயர்த்தப்பட்ட வீதத்தில் உதவித்தொகை பெற ஒரு ஆண்டிற்கு ரூ.3,90,60,000/- தொடர் செலவினமாக நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர், அகவை முதிந்த தமிழறிஞர்கள் 5 பேருக்கு ஒப்பளிப்பு அரசாணையினை இன்றையதினம் வழங்கினார். அதைத் தொடர்ந்து, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வாயிலாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 2 நூல்களை வெளியிடுதல்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இராசேந்திரன் சங்கரவேலாயுதன் எழுதிய “தமிழ் வினையடிகள் – வரலாற்று மொழியியல் ஆய்வு” மற்றும் பா.ரா. சுப்பிரமணியன் எழுதிய “சங்க இலக்கியச் சொல்வளம்” ஆகிய நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.
மேலும், சொல்லின் செல்வர் திரு. சுகி சிவம் அவர்கள் தலைமையில் செம்மொழியின் தனிச்சிறப்பு “அதன் தொன்மையே!” “அதன் இளமையே!” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தில் புலவர் இரெ. சண்முகவடிவேலு, புலவர் மா. இராமலிங்கம், கவிதா ஜவகர், பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் உரையாற்றினர்.
இவ்விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, துணை மேயர் மு.மகேஷ் குமார்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், இ.ஆ.ப., கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் (மு.கூ.பொ) கவிதா ராமு இ.ஆ.ப., செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.