சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில், மூவர்ண தேசியக் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் 4-வது முறையாக ஏற்றி வைத்தார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க காலை 8.48 மணிக்கு கோட்டை கொத்தளம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, தலைமைசெயலாளர் சிவ் தாஸ் மீனா வரவேற்றார். இதன் பின்னர், தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத்தலைவர் லெப்டின்ட் ஜெனரல் கரண் சிங் பிரார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிகுமார் திங்ரா, ஏர் கமாண்டர் ரத்திஷ் குமார், கடலோர காவல்படை அதிகாரி கமாண்டர் டோனி மைக்கேல், தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், கூடுதல் காவல் துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை காவல்துறை ஆணையர் அருண் ஆகியோரை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை மற்றும் கேரள காவல்துறையினர் நடத்திய அணி வகுப்பு மரியாதையை திறந்தவெளி ஜீப்பில் முதல்வர் பார்வையிட்டார். இதன் பின்னர் கோட்டை கொத்தளத்தில் சரியாக காலை 9 மணிக்கு தேசிய கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். இதைத்தொடர்ந்து, தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சியின் முதுப்பெரும் தலைவர் குமரி அனந்தனுக்கும், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது இஸ்ரோவின் சந்திரயான் – 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுவுக்கும், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது துணிச்சலாக பணியாற்றிய செவிலியர் சபீனாவிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
அதேபோல, முதல்வரின் நல்ஆளுமை விருதுகள் முதல்வரின் முகவரித்துறையின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் த.வனிதா, சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி வாயிலாக தமிழ் இலக்கிய படைப்புகளை உலக மொழிகளுக்கு எடுத்துச் சென்ற பொது நூலகங்கள் துறை இயக்குனர் க.இளம்பகவத், அமைப்பு என்ற பிரிவில் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் ந.கோபால கிருஷ்ணன், முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனர் ச.திவ்யதர்சினிக்கும், நான் முதல்வன் திட்டம் வாயிலாக இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முறைகளில் புதுமையை புகுத்தியதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனர் ஜெ.இ்ன்னசன்ட் திவ்யா ஆகியோருக்கு இந்தாண்டுக்கான நல் ஆளுமை விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதனையடுத்து, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜா. விஜயலட்சுமிக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த நிறுவனத்திற்கு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வித்யாசாகர், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர் சென்னையை சேர்ந்த தம.சூசை ஆன்டணி, மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனமான தூத்துக்குடி மாவட்டச் சேர்ந்த திருவாளர் – சந்தானம் பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட், காஞ்சிபுரம் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் மீனாசுப்ரமணியன், சிறந்த தொண்டு நிறுவனமான ஐஸ்வர்யம் அறக்கட்டளைக்கு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகளுக்காக சிறந்த மாநகராட்சியாக கோவைக்கும், சிறந்த நகராட்சியாக திருவாரூருக்கும், சிறந்த பேரூராட்சி-சூலூர் (கோவை), பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்-14வது மண்டலத்திற்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இதுமட்டுமல்லாது, முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆண்கள் பிரிவில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கதிரவன், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோஷன் ரெகோபெர்ட், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராஜ்க்கும், பெண்கள் பிரிவில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நிகிதா, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கவின் பாரதி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த உமாதேவி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிஷா பர்வீன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் 26 விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக, விருது வாங்கியவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட முதல்வர், கோட்டை நுழைவாயில் முகப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.
சந்திரயான் திட்ட இயக்குனருக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2024ம் ஆண்டுக்கான அப்துல் கலாம் விருது ப.வீரமுத்துவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வழங்கி கவுரவித்தார். இவருக்கு விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான வரைவு காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டது. முனைவர் ப.வீரமுத்துவேல் தனது பள்ளி படிப்பை விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் முடித்தார். இதன்பின்னர் சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
இஸ்ரோவின், யு.ஆர். ராவ் செயற்கைகோள் மையத்தில் சந்திரயான்-III திட்டத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் இந்த செயற்கைகோளினை பாதுகாப்பாகவும் மற்றும் மென்மையாகவும் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் வெற்றிகரமாக தரையிறக்கிய ஆராய்ச்சி வல்லுநராவார். நிலவின் தென்துருவத்திற்கு அருகில் சந்திராயன்-III விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையையும், நிலவில் மென்மையாக தரையிறக்கி நான்காவது நாடு என்ற பெருமையையும் பெற்றுத் தந்தவர்.
செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது
கடந்த 30.7.2024 அன்று ஏற்பட்ட நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாட்டில் படுகாயம் அடைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவ முதலுதவி பெட்டியை இறுகப் பற்றிக் கொண்டு வெள்ளம் சீறி வரும் ஆற்றை கவனமாக ஜிப்லைன் மூலம் கடந்து சென்ற நீலகிரியை சேர்ந்த செவிலியர் சபீனா 35க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்க ஜிப்லைனை அமைத்தது. எனினும், தூக்கிச் செல்ல முடியாத அளவுக்கு மக்கள் படுகாயம் அடைந்திருந்தனர். ஆண் செவிலியர் எவரும் இல்லாதபோது, தைரியமும் உறுதியும் ெகாண்ட சபீனா, ஜிப்லைன் மூலம் மறுபுறம் செல்ல முன்வந்தார். தொடர் மழையின் மத்தியிலும், ரெயின் கோட் அணிந்து, முதலுதவி பெட்டியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, இவர் ஆற்றை எந்த பயமும் இல்லாமல் கடந்தார்.சபீனாவின் தன்னலமற்ற மற்றும் தைரியமான இச்செயல் மற்ற பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. சபீனாவின் வீரமான, துணிவான செயலை பாராட்டும் விதமாக அவருக்கு 2024ம் ஆண்டிற்கான துணிவு மற்றும் வீர சாகச செயலுக்கான ‘கல்பனா சாவ்லா விருதை’ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திரதின விழாவில் வழங்கி கவுரவித்தார். இந்த விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழும் வழங்கப்பட்டது.