கோவில்பட்டி : கோவில்பட்டியில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அருந்ததியர் சமூகத்திற்கு உள் இடஒதுக்கீடு வழங்கியது மட்டுமின்றி, உச்சநீதி மன்றம் வரை உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி மற்றும் பாராட்டு விழா கூட்டம் நடைபெற்றது. பேரவை நிறுவன தலைவர் அதியமான் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, மக்கள் விடுதலைக் கட்சி மாநில தலைவர் முருகவேல் ராசன் ஆகியோர் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்பி பங்கேற்று பேசுகையில், ஒன்றியத்தில் ஆளும் அரசு ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ மனசாட்சி உள்ள அத்தனை பேருக்கும் தெரியும் இந்திய விடுதலை போராட்டம் எங்கு ஆரம்பித்து நாடு முழுவதும் தீயாய் பரவி விடுதலையை பெற்று தந்தது என்று.
இப்படிப்பட்ட ஒரு தியாகத்தை செய்த ஒரு சமூகத்திற்கு உரிமை கிடைக்கவில்லை என்பதை உணர்ந்து ஒரு தாயாக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் 3 சதவீத உள் ஒதுக்கீட்டை உருவாக்கி தந்தார். இந்த உள் ஒதுக்கீடு மூலமாக இச்சமூகத்தை சேர்ந்த பலரும் உயர் கல்வி பயின்று இன்றைக்கு அரசு உயர் பதவியில் இருக்கின்றனர்.
கலைஞர் வழியில் ஆட்சி நடத்துபவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். நாணயத்தை ஒன்றிய அரசுதான் வெளியிட முடியும். மற்றவர்கள் வெளியிட முடியாது. தொடர்ந்து தமிழகத்தின் குரலாக, போராளியாக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் போராடுவார். எத்தனை கருத்து வேறுபாடு இருந்தாலும் தமிழர்களாக, மனிதர்களாக உரிமைகளுக்காக சுயமரியாதைக்காக தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி மாரீஸ்வரன், வக்கீல் ராமச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அஸ்மத், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முத்துக்குமார், கயல் முருகேசன், நிர்வாகிகள் சின்னராசு, தமிழ்ச்செல்வன், சேகர், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.