குன்னூர் : குன்னூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர், தமிழக அரசின் தலைமை கொறடா, கலெக்டர் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டத்தில் உயர்கல்விக்காக ஊட்டி, கூடலூர் பகுதிகளில் அரசு கல்லூரிகள் இருந்து வந்தது. அங்கு 8 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இதனிடையே குன்னூர், கோத்தகிரி மாணவர்களின் நலன் கருதி குன்னூரில் அரசு கல்லூரி விரைவில் தொடங்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைமுறையில் இருந்து வந்தது.
கடந்த 2022 ஆண்டு ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அப்போதைய வனத்துறை அமைச்சரும், தற்போதைய அரசு தலைமை கொறடா ராமசந்திரன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 பயின்ற மாணவா்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக்கனவு’ நிகழ்ச்சியில் இது குறித்து பேசினார்.
மலை மாவட்டமான நீலகிரியில் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் அரசு கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் குன்னூர் பகுதியில் இதுவரை கலை அறிவியல் கல்லூரி இல்லாமல் இருந்தது. இதனால் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் பெரும் சிரமமடைந்து வந்தனர்.
மேலும் கல்லூரிகளில் மேற்படிப்பை தொடர உதகை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில் மார்ச் மாதம் 14 ம் தேதி தமிழக பட்ஜெட்டில் குன்னூர் பகுதியில் கலை கல்லூரி கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த திட்டம் மாணவ, மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி உயர்கல்வித்துறை சார்பில் குன்னூர் உட்பட 11 மாவட்டங்களில் நேற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக திறந்து வைத்தார்.
ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி தேவையை நிறைவு செய்யும் பொருட்டு, குறிப்பாக மாணவிகளுக்கு உயர்கல்வியில் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காக உயர்கல்வித்துறை சார்பில் நேற்று குன்னூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது.
குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவ, மாணவிகளின் சேர்க்கை குறைய தொடங்கியதை தொடர்ந்து அந்த பள்ளி கட்டிடத்தில், புதிய கல்லூரி அமைக்கும் வரை தற்காலிகமாக கல்லூரி அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதன் காரணமாக பள்ளியின் ஒரு பகுதியை கல்லூரியாக மாற்றப்பட்டு, நேற்று திறப்பு விழா நடைபெற்றது. அரசு கலை, அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.
முன்னதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் தமிழக அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘‘மாணவர்களின் நீண்ட காலமான கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டது. இத்திட்டம் மாணவ-மாணவிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடம் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது’’ என்றார். பின்னர் பேசிய தலைமை கொறடா ராமசந்திரன், ‘‘தற்போது வரை கல்லூரியில் சேர்வதற்கு சுமார் 800 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் கல்லூரியின் தரம் உயரும்’’ என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் குன்னூர் திமுக நகர செயலாளர் ராமசாமி, குன்னூர் நகர மன்ற தலைவர் சுசீலா, துணை தலைவர் வாசீம் ராஜா உட்பட திமுக நிர்வாகிகளும், உயர்கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.