* சமூக அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
புதுச்சேரி : புதுவை முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு நேற்றிரவு பிசிஎஸ் அதிகாரிகள் அனைவரும் படையெடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரியில் கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 18 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு அரசிதழில் பதிவு பெறாத குருப்-பி பதவிகளை நிரப்ப கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
அப்போது பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையில் சார்பு செயலாளராக இருந்தவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தேவையில்லை என அறிவிப்பு வெளியிட்டார். அதுபோல் 2022ல் துறைமுக துறையில் அரசிதழில் பதிவு பெறாத குருப்-பி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அப்போது சார்பு செயலாளராக இருந்த அதிகாரியும் இடஒதுக்கீடு வழங்க தேவையில்லை என ஆணை வெளியிட்டார். இந்த 2 அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16ம்தேதி திராவிடர் கழக தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் முதலியார்பேட்டையில் உள்ள 2 அதிகாரிகளின் வீட்டு வாசலில் மலர் வளையம் வைத்து ஒப்பாரி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பெண்கள் கலந்து கொண்டு தலைவிரி கோலத்துடன் ஒப்பாரி வைத்தனர்.
இப்போராட்டத்தால் அதிகாரிகளின் குடும்பத்தினர் மிகவும் மனவேதனைக்கு ஆளாகினர். இதனால் நேற்று புதுவையில் உள்ள அனைத்து துறைகளிலும் பணிபுரியும் பிசிஎஸ் அதிகாரிகள் 80க்கும் மேற்பட்டோர் தட்டாஞ்சாவடி மாவட்ட தொழில் மையத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்பது என முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று மாலை 7 மணியளவில் அனைத்து பிசிஎஸ் அதிகாரிகளும் முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு தங்களுடைய காரில் திரண்டு வந்தனர். அப்போது முதல்வர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தார். பிறகு திடீரென அனைத்து அரசு அதிகாரிகளும் ஒரே இடத்தில் படையெடுத்து வந்ததை பார்த்து முதல்வர் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே முதல்வர் ரங்கசாமி விளையாடிக்கொண்டிருந்ததை அப்படியே நிறுத்திவிட்டு அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது அதிகாரிகள் கூறுகையில், சில சமூக அமைப்புகள் அதிகாரிகளின் வீட்டுக்கு சென்று ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இதே நிலைமை மற்ற அதிகாரிகளுக்கும் ஏற்படும். ஆகவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.
இதற்கு முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் அரசு இயந்திரம் என்பது சட்டமன்றமும், தலைமை செயலகமும் தான். போராட்டத்தில் ஈடுபடுவர்கள் என்னை சந்தித்து முறையிடலாம். போஸ்டர் ஒட்ட வேண்டும் என்றால் சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகம் அருகே ஒட்டலாம். வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளில் அவர்களுக்கு இருக்கும் அதே உணர்வு தான் எனக்கும் உள்ளது. அதிகாரிகளை மிரட்டுவது தவறான முன்னுதாரணம். சமீப காலமாக இந்த போக்கு அதிகரித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தேர்தலில் நிற்க போவதும் இல்லை, நின்றாலும் வெற்றிபெற போவதுமில்லை. எந்தவொரு முடிவையும் நானும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தான் எடுக்க வேண்டும். சுமை தாங்கி கற்கள் போல அனைவரது கோரிக்கைகளையும் சுமப்பது சட்டமன்றம் தான்.
அதற்கான சக்தி என்னிடம் உள்ளது. நீங்கள் கையெழுத்து போடும் அதிகாரி அவ்வளவு தான். நான் அவர்களை அழைத்து பேசி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். இதனை ஏற்ற அதிகாரிகள் முதல்வரின் வீட்டில் இருந்து கலைந்து சென்றனர். புதுவையை ஆட்டிப்படைக்கும் அதிகாரிகள் அனைவரும் ஒரே நேரத்தில் வாகனத்தில் அணிவகுத்தபடி முதல்வர் வீட்டுக்கு படையெடுத்த வந்த சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘‘அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்படும்’’
இதுகுறித்து திராவிடர் விடுதலை கழகத்தினரிடம் கேட்டபோது, புதுச்சேரியில் அதிகாரிகளின் அதிகார அராஜகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பதில்லை. புதுவையில் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் உள்ளது. பல முறைகேடுகள் நடந்து வருகிறது. அதிகாரிகளை கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லை. ஆகவே அதிகாரிகளை அரசு கேள்வி கேட்க வேண்டும்.
அதிகாரிகளால் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களிடத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர். இடபுள்யு இடஒதுக்கீடு கொண்டு வரும் போது அப்போதைய முதல்வர் நாராயணசாமி அதற்கு ஒப்புக்கொள்ளாதபோது இதே அதிகாரிகள் கவர்னர் மூலம் நேரடியாக இடஒதுக்கீட்டை கொண்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை கொடுப்பதற்கு யாருக்கும் மனமில்லை. அதிகாரிகள் கொட்டம் அடக்கப்படும். இதற்கு இப்போராட்டம் முன் உதாரணமாக இருக்கும் என்றனர்.