*தலைமை ஆசிரியர்களுக்கு துணை ஆணையர் அறிவுறுத்தல்
ஈரோடு : மாணவ, மாணவிகள் சத்தான உணவு உட்கொண்டு, நல்ல முறையில் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு முதல்வர் செயல்படுத்தி வரும் காலை உணவுத்திட்டத்தினை முறையாக செயல்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு, மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி அறிவுறுத்தினார்.
ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. துணை ஆணையர் தனலட்சுமி தலைமையில் நடந்த கூட்டத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட 59 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், உணவு தயார் செய்யும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, நிர்மானிக்கப்பட்ட சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர் அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்கப்படுகிறதா? என்பது குறித்து தலைமை ஆசிரியர்களிடம், துணை ஆணையர் தனலட்சுமி கேட்டறிந்தார்.
அதன்பின், முதல்வரின் காலை உணவுத்திட்டத்தினால் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கூறப்படும் கருத்துக்கள் என்னவென்பதை அவர் கேட்டறிந்தார். மேலும், மாணவ, மாணவிகள் சத்தான உணவு உட்கொண்டு, நல்ல முறையில் கல்வி பயில வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், முதலமைச்சர் செயல்படுத்தி வரும் இத்திட்டத்தினை முறையாக செயல்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, உணவுக்கூடம், சமையற் பொருட்கள் வைக்கும் அறை, பாத்திரங்கள் வைக்கும் அறை ஆகியவை சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும் என்று உணவு தயார் செய்யும் ஊழியர்களுக்கு துணை ஆணையர் தனலட்சுமி அறிவுறுத்தினார்.மேலும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு பொருட்கள் இருப்பு உள்ளதா என்றும் அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறதா என்றும் ஊழியர்களிடம் அவர் கேட்டறிந்தார்.