Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மந்த கதியில் நடைபெற்று வரும் சிதம்பரம் ரயில் நிலைய பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள், பயணிகள் எதிர்பார்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில், தில்லை காளியம்மன் கோயில், அண்ணாமலை பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளிட்ட ஆன்மீக தலங்களும், கல்வி நிறுவனங்களும், சுற்றுலா மையங்களும் உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரயில் பயணங்கள் மூலம் சிதம்பரம் நகர பகுதிக்கு வந்து செல்கின்றனர். அதேபோல், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலக பணி உள்ளிட்ட அனைத்திற்கும் பல்வேறு இடங்களில் இருந்து அதிக அளவில் ரயில் பயணங்களில் இங்கு வருகின்றனர்.

இந்நிலையில் சிதம்பரம் ரயில் நிலையத்தை நவீன மயமாக்கும் திட்டத்தின்படி ரயில் நிலையங்களின் முன்புறம் சாலை அமைக்கப்பட்டு, புதிய நுழைவு வாயில் கட்டப்பட்டது. பார்க்கிங் வசதி மற்றும் நடைமேடைகளில் பளிங்கு கற்களால் வழுவழுப்பான தரைதளம் அமைக்கப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடந்து செல்லும்போது வழுக்கி விழும் நிலை உள்ளது. டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள், காத்திருப்பு அரங்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரைதளம் உள்ளிட்ட பணிகளும் நடைபெறுகிறது.

இந்த பணிகள் அனைத்தும் நீண்ட நாட்களாக மந்த கதியில் நடப்பதால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் பாதிப்படைகின்றனர். மேலும் ரயில் நிலைய பிளாட்பார்ம் பகுதிகளில்

ஒருசில இடங்களில் பணிகள் நடைபெறாமல் உள்ளது. அதேபோல் நடைமேடை அருகே நடைபெற்று வரும் பணிகளின் இடையே ஆங்காங்கே சில இடங்களில் பள்ளங்கள் தோண்டி செம்மண் குவியிலாக உள்ளது. இதனால் நடைமேடை பகுதி வழியாக செல்லும் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

நடைமேடை அருகே நடைபெறும் பணிகளுக்காக தளவாடப் பொருட்கள், இரும்பு கம்பிகள் போன்றவை அப்பகுதி ஓரமாக அதிக அளவில் வைத்துள்ளனர். இதனால் வேகமாக ரயிலில் ஏறுவதற்கு வருபவர்கள் இந்த கம்பிகள் மீது எதிர்பாராத விதமாக மோதி படுகாயமடைகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரும் பாதிப்படைகின்றனர்.

மேலும், வெளிப்புற பகுதி நுழைவாயில் அருகே நடக்கும் பணியும் மந்தமான நிலையிலேயே நடைபெற்று வருகிறது. எனவே ரயில் நிலையத்தில் மந்த கதியில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள், பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.