சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதிகளில் எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாகவும், கோயிலின் முதல் மற்றும் 2வது பிரகாரங்களில் எந்த அனுமதியுமின்றி 100 அறைகள் கட்டப்படுவதாகவும் கூறி, பொது தீட்சிதர்கள் குழுவின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி நடராஜ் தீட்சிதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு,கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு அக்டோபர் 17ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி பொது தீட்சிதர்கள் குழு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அவர்கள் தரப்பு மனுவில், வழக்கு தொடர்ந்த நடராஜ் தீட்சிதர் கோயில் நிர்வாகத்துடன் தொடர்பு இல்லாத இந்து சமய அறநிலையத் துறையினருடன் சேர்ந்துகொண்டு கோயிலின் செயல்பாடுகளுக்கு எதிராக செயல்படுகிறார். கோயில் நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதால் பொது தீட்சிதர் குழுவால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இதேபோன்ற புகார் அளிக்கப்பட்ட நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் வந்து வீடியோ பதிவுடன் ஆய்வு செய்தனர்.
அதன்பின்னர் அனுப்ப்பபட்ட நோட்டீஸ்களுக்கும், கட்டுமானங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலின் நிர்வாகத்தில் தலையிட அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில், அறநிலையத்துறையை தலையிட வைக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டு உத்தரவு பெறப்பட்டுள்ளது.
அறநிலையத்துறையின் கருவியாக செயல்படும் ஒருவர் தொடர்ந்த வழக்கில், எதிர் மனுதாரராக இருந்த எங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும். மறு ஆய்வு மனுவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை அக்டோபர் 17ல் பிறப்பித்த உத்தரவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.