சென்னை : சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவது கவலை அளிக்கிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விருதுநகர் மாவட்டத்தில், குறிப்பாகச் சிவகாசி பகுதியில், பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழப்பது கவலையளிக்கிறது.
இந்த விபத்துகளைத் தடுப்பதற்கு வழிவகைகளை முனைந்து செயல்படுத்த வேண்டும்.
சில யோசனைகள்:
1. பட்டாசு தயாரிக்கும் ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களைக்
கலந்தாலோசித்துப் புதிய பாதுகாப்பு விதிகளை வரையவேண்டும் (1 மாதம்)
2. வரைவு விதிகளின் மீதி பொதுமக்கள் மற்றும் வல்லுனர்களின் கருத்துக்களைக் கேட்டு இறுதி விதிகளை வகுக்க வேண்டும் (1 மாதம்)
3. பாதுகாப்பு விதிகளைத் தளர்த்தாமல் கண்டிப்பாகச் செயல்படுத்தக்கூடிய அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியளித்து அவர்களை நியமிக்க வேண்டும் (1 மாதம்)
4. அந்த அதிகாரிகளை இரண்டு ஆண்டுகளுக்கு வேலைமாற்றம் செய்யக்கூடாது, பணியிடங்கள் காலியாக இருக்கக் கூடாது
5. விதிமீறலின் காரணமாக விபத்து நடந்து உயிர்ச்சேதம் அல்லது படுகாயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்:
முதல் முறை: கடும் அபராதம், இழப்பீடு;
இரண்டாம் முறை: ஓராண்டு இடைநிறுத்தம், இழப்பீடு;
மூன்றாம் முறை: உரிமம் ரத்து, இழப்பீடு
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.