சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 6 கால பூஜை தவிர மற்ற நேரங்களில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது என பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது தீட்சிதர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை. மேலும், ஆறு கால பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் கனகசபையில் அனுமதிக்கப்படுவதில்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் விழாக்காலங்களில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்யத் தீட்சிதர்கள் அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 6 கால பூஜை தவிர மற்ற நேரங்களில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது என பொது தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.