கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் இரண்டு திருவிழாக்கள் புகழ் பெற்றது. ஆனி மாதத்தில் நடைபெற உள்ள ஆனி திருமஞ்சன திருவிழாவும் மற்றும் மார்கழி மாதத்தில் நடைபெறும் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவும் பிரசித்தி பெற்றது. இந்த இரண்டு திருவிழா காலங்களில் 10 நாட்கள் உட்சவம் நடக்கும்.
அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சனம் விழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக இன்று காலை தொடங்கியது. இதனை முன்னிட்டு, சிவ வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. நடராஜர் கோவிலின் சித்சபைக்கு எதிரேயுள்ள கொடி மரத்தில், திரளான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பக்தர்கள் பக்தியுடன் இறைவனை வேண்டி கொண்டனர். இதில், முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 1ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 2ம் தேதி ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெறும். கொடியேற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் திரளாக வந்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.