*உடனே அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
சிதம்பரம் : சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே வீட்டு வசதி வாரியம் மூலம், அரசு ஊழியர்களுக்கு குறைந்த வாடகையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த கட்டிடம் மிகவும் சேதம் ஆனதால், அங்கு குடியிருந்தவர்கள் வீடுகளை காலி செய்து வெளியேறினர். தற்போது இவை இடிந்து விழும் நிலையில் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் தர வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி கொடுத்துள்ளது.
இந்நிலையில் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 40 ஆண்டுகளுக்கு முன், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதியில் 3 அடுக்கு மாடிகளை கொண்ட 9 கட்டிடங்கள் தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டி கொடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிதம்பரம் பகுதியில் பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்த அரசு ஊழியர்கள் குடியிருந்து வந்தனர். இந்த குடியிருப்புகள் அரசு ஊழியர்களுக்கு பேருதவியாக இருந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் பல ஆண்டுகள் கடந்த நிலையில் கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்தன. கட்டிட மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வந்தன. கட்டிடத்தின் சுவர், தரைகள், படிக்கட்டுகள் உள்ளிட்ட பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால் இங்கு குடியிருந்தவர்கள் வீடுகளை காலிசெய்து சென்று விட்டனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது யாரும் குடியிருக்காத நிலையில் இந்த குடியிருப்புகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. மேலும் இந்த கட்டிடம் அருகே முள் செடிகளும், புதர்களும் பெரியளவில் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதுதவிர இந்த குடியிருப்பு அருகிலேயே மின்மாற்றியும் உள்ளது.
மழைக் காலங்களில் இதன்வழியாக மின்அலுவலக ஊழியர்கள் இதை மின்மாற்றியில் ஏதாவது ரிப்பேர் ஆனால், சரி செய்வதற்கு, செல்வதற்கும்கூட மிகவும் அச்ச உணர்வுடனே சென்று வருகின்றனர். புதர்கள் மற்றும் மரங்கள் அதிகளவில் இந்த குடியிருப்புகளை ஒட்டி வளர்ந்துள்ளதால், பாம்பு மற்றும் விஷபூச்சிகள் தஞ்சமடைந்து கொள்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பேருந்து நிலையம் அருகில் உள்ளவர்கள் மிகவும் பயந்த நிலையிலேயே சென்று வருகின்றனர்.
புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்
சிதம்பரம் நகர மன்ற துணை தலைவர் முத்துகுமார் கூறுகையில், சிதம்பரம் நகராட்சி 33வது வார்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்து பயன்பாடற்ற நிலையில் இருந்ததால் சமீபத்தில் அந்த கட்டிடத்தை இடிப்பதற்கு டெண்டர் விடப்பட்டு ஓரளவு இடிக்கும் பணி நடைபெற்றுவந்த நிலையில், தற்போது பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் முட்புதர்களுடன் காடுகளைப் போன்று காட்சியளித்து வருவதால் பல்வேறு குற்ற சம்பவங்கள் இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது. எனவே பழுதடைந்த கட்டிடத்தை அப்புறப்படுத்தி விட்டு வீடு கட்டி தர வேண்டும், என்றார்.