பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு போகிபாளையம் கார்ப்பரேஷன் லைன் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு (37). இவர் படாளம் மீன் மார்க்கெட்டில் மீன் சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கிரி என்பவரும் அதே மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
நண்பர்களான இவர்கள், நேற்றிரவு 9 மணி அளவில் கார்ப்பரேஷன் லைன் பொது கழிப்பிடம் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது கிரி குடிபோதையில், ‘’தனக்கு பசிக்கிறது. எனவே, சிக்கன் ரைஸ் வேண்டும்’ என்று கேட்டபோது அதற்கு வடிவேல், ‘’தன்னிடம் காசு இல்லை’’ என்று கூறியுள்ளார்.
இதனால் கடும் கோபம் அடைந்த கிரி, ‘’நீதான் அதிகமாக மீன்களை வெட்டினாய், எனவே, உன்னிடம் பணம் உள்ளது. ஒழுங்காக சிக்கன் ரைஸ் வாங்கி கொடு’’ என்று மீண்டும் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் காரணமாக கிரி, தான் வைத்திருந்த கத்தியால் வடிவேலுவின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வடிவேலுக்கு இடது தலை மற்றும் காது உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து வடிவேலுவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தலையில் 16 தையல்களும் கழுத்தில் 9 தையல்களும் போடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வடிவேலு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து இன்று அதிகாலை கிரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.