பெரம்பூர்: பாஸ்ட் புட் கடையில் ஓசியில் சிக்கன் ரைஸ் கேட்டு கொதிக்கும் எண்ணெயை கீழே ஊற்றி ரகளையில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (29). வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 10வது தெருவில் செயல்பட்டு வரும் பாஸ்புட் கடையில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இந்த கடைக்கு போதையில் வந்த 5 பேர், ‘‘நாங்கள் இந்த ஏரியாவில் பெரிய ரவுடிகள், எங்களுக்கு மாமூல் தரவேண்டும், ஓசியில் 5 சிக்கன் ரைஸ் போட்டு கொடு,’’ என கேட்டுள்ளனர்.
கடையில் இருந்த சூர்யா, பணம் கொடுத்தால்தான் சிக்கன் ரைஸ் போட்டு தர முடியும், என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், கத்தியால் வெட்டிவிடுவோம் என மிரட்டிவிட்டு, கடையில் இருந்த காஸ் அடுப்பு, சிக்கன் மற்றும் கடாயில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை கீழே தள்ளி சேதப்படுத்திவிட்டு தப்பினர். இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சூர்யா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், 5 பேரில் 2 பேர் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், வியாசர்பாடி எஸ்ஏ காலனி பகுதியை சேர்ந்த அசோக் (27), ரவிக்குமார் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. தப்பிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.