கொடைக்கானல்: கொடைக்கானலில் ‘பார்பி க்யூ’ சிக்கன் சமைக்க பயன்படுத்திய அடுப்பு கரியை அணைக்காமல் அறையில் தூங்கியதால் சென்னை ஐடி ஊழியர் உள்பட 2 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை, கொளத்தூரை சேர்ந்தவர் ஆனந்த்பாபு (33). ஐடி ஊழியர். திருச்சியை சேர்ந்தவர்கள் ஜெயகண்ணன் (33), சிவசங்கர் (29), சிவராஜ் (28). இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்துள்ளனர்.
நாயுடுபுரம் சின்னபள்ளத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். இவர்கள் பார்பி க்யூ செய்ய சிக்கன், மசாலா பொருட்கள், மேலும் அதனை தயார் செய்ய தேவைப்படும் அடுப்பு, கரி ஆகியவற்றை வாங்கி வந்துள்ளனர். கொடைக்கானலில் நேற்று முன்தினம் பகல் முதல் இரவு வரை விடாமல் மழை பெய்ததால் இரவில் கடும் குளிர் நிலவியது. இதையடுத்து இவர்கள் இரவில் மது அருந்தி விட்டு, அடுப்புக் கரியை (லிக்கோ கரி) கொண்டு தங்கும் அறையிலேயே பார்பி க்யூ சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் ஆனந்த்பாபு, ஜெயகண்ணன் ஒரு அறையிலும், சிவசங்கர், சிவராஜ் வேறு ஒரு அறையிலும் உறங்கியுள்ளனர். இதில் பார்பி க்யூ சிக்கன் செய்த அடுப்பை குளிருக்கு இதமாக இருக்கும் என்பதால் அணைக்கவில்லை. அவர்கள் பயன்படுத்திய லிக்கோ கரி கார்பன் டை ஆக்சைடு உருவாக்கும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஜெயகண்ணனும், ஆனந்த்பாபுவும் தங்கிய அறையில் இரவு முழுவதும் கார்பன் டை ஆக்சைடு பரவியுள்ளது.
நேற்று காலை சிவசங்கரும், சிவராஜூம் எழுப்ப சென்றபோது, அவர்கள் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்துள்ளனர். அந்த பணியாளர்கள் சோதித்தபோது ஜெயகண்ணனும், ஆனந்த்பாபுவும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து கொடைக்கானல் போலீசார் வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுபற்றி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைக்கானலில் ஏற்கனவே இதுபோல் அடுப்பு கரி புகை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு 3 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* லண்டனில் இருந்து வந்தவர் ஜெயகண்ணனும், ஆனந்த்பாபுவும் சிவசங்கரின் நண்பர்கள். இதில் ஜெயகண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் லண்டனில் இருந்து பணி முடித்து ஓய்வுக்காக தமிழ்நாடு வந்ததாக கூறப்படுகிறது.