காந்திநகர்: தேர்தல் பணியின் போது சிக்கன், உலர் பழங்கள் சாப்பிட்ட அதிகாரிகள், குஜராத் தேர்தல் ெசலவில் ரூ.121 கோடி முறைகேடு செய்துள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ கேள்வி எழுப்பிய நிலையில், அவர் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், சட்டமன்ற கூட்டத்தில் பேசிய வட்காம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, ‘கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது சில மாவட்ட ஆட்சியர்கள் நிதி முறைகேடுகள் செய்துள்ளனர்.
இந்த முறைகேடுகள் மூலம் குஜராத் அரசுக்கு ரூ.121 கோடி கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளனர். இவ்விசயம் தொடர்பாக குஜராத் தலைமைத் தேர்தல் அலுவலகம், போர்பந்தர், ஜாம்நகர், தாஹோத், பருச், கிர் சோம்நாத் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் சமர்பித்த தேர்தல் செலவின அறிக்கை நம்பத்தகுந்தவை அல்ல என்று கூறியது. அப்போதைய போர்பந்தர் மாவட்ட தேர்தல் அதிகாரி, குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளுக்கு வெளியே தற்காலிக சாய்வு தளம் அமைப்பதற்காக ரூ.20 லட்சத்திற்கு டெண்டர் விடுத்தார். ஆனால் அந்தப் பணியை ெசய்த நிறுவனம், மேற்கண்ட பணியை முடித்த பிறகு ரூ.2.56 கோடிக்கு பில் சமர்ப்பித்தது. தேர்தல் அதிகாரியான கலெக்டரும், அந்த பில்லுக்கு ஒப்புதல் அளித்தார்.
காந்திநகர் மாவட்ட தேர்தல் அதிகாரி, டெண்டர் தொகையை விட மூன்று மடங்கு அதிகமான தொகைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், ரூ.16,000 மதிப்புள்ள உலர் பழங்களை சாப்பிட்டதாகவும், அதற்கும் ஆட்சியர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் போர்பந்தர் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் ரூ.30,000-க்கு கோழிக்கறி (சிக்கன்) சாப்பிட்டனர். உணவகத்தின் சமையல்காரரின் சம்பளத்தையும் சேர்த்து பில் போட்டுள்ளனர். ரூ.6,000க்கு கிடைக்கும் வாகனத்தில் நிறுவப்படும் சைரனுக்கு ரூ.60,000 பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜாம்நகர் தேர்தல் அதிகாரி, ஒரே நாளில் தனது வாகனத்திற்கு 90 லிட்டர் எரிபொருள் பயன்படுத்தி உள்ளார். அதற்கான பில்லையும் கிளைம் ெசய்துள்ளார். ஜாம்நகரில் அமைந்துள்ள கலாவத் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நாளில் 900 கிலோமீட்டர் அவர் பயணம் செய்தாரா? எனவே இந்தப் பிரச்னையை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் செலவினங்கள் தொடர்பான நிதியில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும். போலி பில் போட்டு பணத்தை அதிகாரிகள் சுருட்டியதால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும்’ என்றார்.
எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியின் தேர்தல் செலவின புகார் தொடர்பான கூற்றுக்களை, அவைக் குறிப்பில் நீக்குமாறு மாநில பாஜக அமைச்சர் ருஷிகேஷ் படேல் வலியுறுத்தினார். இருப்பினும், இதுகுறித்து எவ்வித உத்தரவையும் சபாநாயகர் பிறப்பிக்கவில்லை. அமைச்சரின் கருத்துகளால் ஜிக்னேஷ் மேவானி, அவையின் மையப்பகுதிக்கு விரைந்து சென்று, தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கக் கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். பலமுறை சபாநாயகர் கோரிக்கை விடுத்தும் அவர் தனது இருக்கைக்குத் திரும்பவில்லை. அதனால் அவரை ஒரு நாள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்பின் ஜிக்னேஷ் மேவானியை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியே அழைத்துச் சென்றனர். ஜிக்னேஷ் மேவானியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சட்டமன்ற விவகாரங்கள் அமைச்சர் ருஷிகேஷ் படேல், ‘மக்களவைத் தேர்தல்கள் தலைமை தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. தேர்தல் அதிகாரிகளை நியமிப்பது அல்லது மேற்பார்வையிடுதல் போன்ற பணிகளில் மாநில அரசு தலையிட முடியாது’ என்று கூறினார்.