Saturday, April 20, 2024
Home » சிக்கன் உப்புக்கறி… சிக்கன் கரமுறா…

சிக்கன் உப்புக்கறி… சிக்கன் கரமுறா…

by Lavanya

ஆர்க்கிடெக்ட் நடத்தும் அசைவ உணவகம்!

உலகெங்குமே பலரால் விரும்பி உண்ணப்படும் உணவு என்றால் அது பிரியாணி தான். அதனால்தான், பிரியாணியை யூனிவர்சல் டிஷ் எனச் சொல்கிறார்கள். சுவையிலும் செய்முறையிலும் ஒவ்வொரு பகுதியிலும் வேறுவேறு வகையான பிரியாணிகள் இருக்கின்றது. சுமார் 80 வகையான பிரியாணிகள் உலகெங்கும் இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. ஆன்லைனில் அதிகமாக ஆர்டர் செய்யும் உணவுப் பட்டியலில் பிரியாணிக்குதான் எப்போதும் நம்பர் ஒன் இடம். இப்படி பிரியாணியைப் பற்றிப் புகழ பல விசயங்கள் இருக்கின்றன. நல்ல சுவையான ஆரோக்கியமான பிரியாணி எதுவெனக்கேட்டால், பிரியாணி சாப்பிட்ட அடுத்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் பசிக்க வேண்டும். அதுதான் சிறந்த பிரியாணி எனச் சொல்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். சென்னையில் தெருவுக்கு பத்து பிரியாணி கடைகள் இருந்தபோதிலும், ஆரோக்கியமான பிரியாணியை தேடித்தான் சாப்பிட வேண்டும். அப்படி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட தரமான ரெஸ்டாரென்ட் என்றால் அது ‘சோழி தேக்‌ஷா பிரியாணி’ என்கிற உணவகம்தான். பள்ளிக்கரணை ராம் நகர் பகுதியில் இருக்கிற இந்த உணவகம், ஃபுட்டீஸ்களின் கூடாரமாக இருக்கிறது.சுவை முக்கியம்தான்.

ஆனால், அதைவிட ஆரோக்கியம் முக்கியம் என பேச்சைத் தொடங்கினார், உணவகத்தின் உரிமையாளர் ராகவி. மிட் நைட் பிரியாணி, இயர்லி மார்னிங் பிரியாணி என பிரியாணியை எல்லா வேளை உணவாகவும் சென்னையில் சாப்பிடும் மக்கள் இருக்கிறார்கள். அப்படிச் சாப்பிடுகிறவர்கள், சுவைக்காக மட்டும் பிரியாணியை உண்ணுகிறார்கள். ஆரோக்கியத்தைப் பற்றி யோசிப்பதே கிடையாது. அந்தளவிற்கு பிரியாணி நமது அன்றாடத்தில் ஒன்றாக மாறி விட்டது. அப்படி பிரியாணியைத் தேடிப்போய் சாப்பிடும் மக்களுக்கு ஆரோக்கியமான பிரியாணியைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் சோழி தேக்‌ஷா பிரியாணி.பேசிக்கா நான் ஒரு ஆர்க்கிடெக்ட். அதுதான் என்னோட புரஃபஷனல். படிப்பு முடிச்சவுடன் ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்தேன். எனக்கு பிடித்த மாதிரி அந்த வேலை இல்லை என்பதால் ஒரு கட்டத்தில் அந்த வேலையை விட்டு வெளியேறினேன். சின்ன வயதில் இருந்தே எனக்கு உணவிலும் சமையலிலும் ரொம்ப ஆர்வம். வேலையிலிருந்து வெளியே வந்தவுடன் சொந்தமா ஏதாவது பிஸினஸ் தொடங்கணும்ன்னு யோசனை. ஃபுட்ஸ் மேல இருக்கிற ஆர்வத்தால் ரெஸ்டாரென்ட் தொடங்கலாம்ன்னு முடிவெடுத்து இந்த உணவகத்தை நடத்திட்டு வருகிறேன்.

பலதரமான உணவுகள் இருந்தாலும் பிரியாணி ஒரு யூனிவர்சல் டிஷ் என்பதால் அதை சிறப்பாக கொடுக்கலாம் என முடிவெடுத்து, பிரியாணி பற்றி ஆய்வு பண்ணத் தொடங்கினோம். எனக்குத் துணையாக என்னோட கணவரும் எனக்கு எல்லா விதத்திலும் உதவி செய்தார். பிரியாணி பற்றி ஆய்வு செய்ததில் ஆரம்பத்தில் பிரியாணி எங்கு சமைக்கப்பட்டது, எப்படி சமைக்கப்பட்டது, முதன்முதலில் எந்த விதமான பாத்திரத்தில் பிரியாணி சமைத்தார்கள், எந்த இறைச்சியில் பிரியாணி செய்தார்கள் என அனைத்தும் தெரிந்துகொண்டேன். ஆரம்பத்தில் பிரியாணி செய்யும்போது, ஸ்லோ குக்கிங் முறையில், விறகு அடுப்பில், தேக்‌ஷா எனப்படும் காப்பர் பாத்திரத்தில் சமைத்திருக்கிறார்கள். அந்த முறையில் செய்யப்பட்ட பிரியாணிதான் மிகச்சரியான ஆரோக்கியமான பிரியாணியாகவும் இருந்திருக்கிறது. அதனால், அதே மாதிரியான பிரியாணியைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நானும் பிரியாணி தயாரிப்பதற்கான தேக்‌ஷா பாத்திரத்தை தேடி அலைந்தேன். கும்பகோணம், சேலம், தஞ்சாவூர் என பல இடங்களில் அந்தப் பாத்திரத்தைத்தேடி கடைசியில் அந்தப் பாத்திரம் சென்னையில் ஒரு இடத்தில் கிடைத்தது. மற்ற பாத்திரத்தைப் போல இந்த தேக்‌ஷா பாத்திரத்தில் எளிதாக சமைக்க முடியாது.

இது காப்பர் பாத்திரம் என்பதால் அதிகளவு வெப்பத்தை எடுத்து வைத்துக்கொள்ளும். அதனால், இதில் சமைப்பது மிகவும் கஷ்டம். இறைச்சி, அரிசி என ஒவ்வொன்றும் அந்த பாத்திரத்தின் வெப்பத்திற்கு தகுந்தாற்போல் இருக்க வேண்டும். அதே நேரம் காப்பர் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமும் கூட. அதனால், ஆரோக்கியமான பிரியாணிதான் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து இந்த தேக்‌ஷா பாத்திரத்தில் சமைத்துப் பழகி, இப்போது சரியான முறையில் சுவையான பிரியாணியை கொடுத்து வருகிறோம். லெகான் கோழி பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி நமது உணவகத்தில் இருக்கிறது. அதுவும், வார இறுதியான வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற மூன்று நாட்களில் இந்த பிரியாணியை கொடுத்து வருகிறோம். மற்ற நாட்களில் ப்ரீ ஆர்டர் முறையில் புக்கிங் செய்பவர்களுக்கு பிரியாணி செய்து கொடுக்கிறோம். இதுபோக, நமது உணவகத்தில் சிக்கன் உப்புக்கறி ரொம்ப ஃபேமஸ். கிராமங்களில் எந்த மசாலாவும் சேர்க்காமல் உப்பு, கறி, வரமிளகாய், எண்ணெய் மட்டுமே சேர்த்து ஒரு உப்புக்கறி செய்வார்கள். மிக எளிய செய்முறை. ஆனால், சுவை அபாரமாக இருக்கும். இந்த சிக்கனை யாருமே இப்போது சமைப்பதும் கிடையாது, சாப்பிடுவதும் கிடையாது.

அதனால் அந்த சிக்கனை இந்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிக்கன் உப்புக்கறி கொடுக்கிறோம். அப்பறம், கரமுறா சிக்கன் ஃப்ரை என்று புது வகையான ஃப்ரையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். சிக்கனின் சதைப்பகுதியை மட்டும் எடுத்து செய்யப்படும் இந்த ஃப்ரை, சிக்கன் 65வின் இன்னொரு வெரிசன் எனச் சொல்லலாம். இந்த டிஷ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இருக்கிறது. இதுபோக, தவாவில் ஃப்ரை செய்த இறால் ஃப்ரை. வீட்டு மசாலாவில் செய்துகொடுப்பதால் சுவை அபாரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்துகொண்டு இன்னும் பல வெரைட்டிகளை அறிமுகப்படுத்த இருக்கிறோம். உணவுகளை எந்தளவு சிறப்பாக சமைக்க முடியுமோ, அதே யோசனையுடன்தான் எங்களது உணவகத்தையும் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். கூரை கொட்டகைகள், முள் வேலிகள், கீழே அமர்ந்து சாப்பிடும் முறை என ஒவ்வொன்றையும் வில்லேஜ் செட்டப்பில் உருவாக்கி இருக்கிறோம். நமது உணவகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதும் கிடையாது. நான் ஒரு ஆர்க்கிடெக்ட் என்பதால் அனைவருக்கும் பிடித்தமாதிரி இன்டீரியரை உருவாக்கி இருக்கிறோம். கடைக்கு வருபவர்கள் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடும் வகையில் ப்ரைவசியாகவும் தனித்தனி இடங்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில், என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதைப் போலவே அந்த உணவை எங்கு சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். ஒருமுறை ஒரு இடத்திற்கு சாப்பிட வருபவர்கள், சாப்பிட்ட தருணத்தை மெமரீஸாக வைத்திருக்க வேண்டும், அந்தளவில் எங்கள் உணவகம் வாடிக்கையாளர்களின் மெமரீஸாக இருக்கும் என மகிழ்வோடு கூறுகிறார் ராகவி.

ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்.

You may also like

Leave a Comment

13 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi