ராய்ப்பூர்: மகாதேவ் சூதாட்ட ஆப் மோசடி வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சட்டீஸ்கர் பாஜ அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பால் இருவர் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற சூதாட்ட ஆப் நடத்தி வந்தனர். இந்த ஆப் மூலம் தினமும் ரூ.200 கோடி லாபம் சம்பாதித்த அவர்கள், மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு, சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ரூ.508 கோடி வழங்கியதாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத் துறை ஓராண்டாக விசாரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது சட்டீஸ்கரில் பாஜ ஆட்சி அமைந்துள்ள நிலையில், மகாதேவ் ஆப் மோசடி வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 70 வழக்குகள் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு வசம் உள்ள ஒரு வழக்கு ஆகியவை அனைத்தும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பதாக துணை முதல்வர் விஜய் சர்மா நேற்று தெரிவித்துள்ளார்.