ராய்பூர்: சட்டீஸ்கரில் பாஜ ஆட்சி அமைத்தால் ஊழல் செய்தவர்கள் தலைகீழாக தொங்கவிடப்படுவார்கள் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ஆவேசமாக தெரிவித்துள்ளார். சட்டீஸ்கரில் நேற்று சுற்றுப்பயணம் செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்றை நேற்று வௌியிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: சட்டீஸ்கரில் காங்கிரஸ் அரசு ஊழல், கொள்ளைகளில் ஈடுபட்டு, மக்களுக்கு எதிராக அட்டூழியங்களை செய்கிறது. காந்தி குடும்பத்தின் ஏடிஎம் எந்திரமாக சட்டீஸ்கர் மாறி விட்டது. பூபேஷ் அரசு ஊழலின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து விட்டது. வாக்கு வங்கி அரசியலுக்காக சட்டீஸ்கரின் பழங்குடியின பகுதிகளில் மத மாற்றங்களை தடுக்க மாநில அரசு தவறி விட்டது.
நிலக்கரி, மதுபானம், ஆன்லைன் சூதாட்டம் உள்பட பல்வேறு ஊழல்களை செய்த பூபேஷ் அரசு தூக்கி எறியப்பட வேண்டும். சட்டீஸ்கர் மாநிலத்தை பாஜவால் மட்டுமே காப்பாற்ற முடியும். ஊழல்களில் திளைக்கும் காங்கிரஸ் அரசு வேண்டுமா? அல்லது மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடும் பாஜ அரசு வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும். அதற்குமுன் சட்டீஸ்கர் பேரவை தேர்தலில் பாஜ அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். சட்டீஸ்கரில் பாஜ வெற்றி பெற்றால் ஊழல் செய்தவர்கள் தலைகீழாக தொங்கவிடப்படுவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.