திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட திலக் நகர், கிருஷ்ணா நகர், ஓம் கணபதி நகர், கங்கா நகர் அனெக்ஸ் 4 ஆகிய நகர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற மனை பிரிவுகளாகும். இந்த நகர்களின் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமியிடம், சங்க சட்ட ஆலோசகரும், புரட்சி பாரதம் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளருமான இ.ரமேஷ் கோரிக்கை கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
அதில் மேற்படி நகர்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டு மனைகளில் தற்போது 50க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். அது மட்டுமன்றி ஒரு சிலர் வீடுகள் கட்டியும் ஒரு சிலர் வீடுகள் கட்டுவதற்காக தயாராகி வருகின்றனர். இந்த நகர்களில் 40 அடி 33 அடி 23 அடி கொண்ட சாலைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் சென்னை – திருப்பதி சாலையில் இணைகின்றது.
இந்நிலையில் தற்போது திருவள்ளூர் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால் இந்த நகர்களில் உள்ள 40 அடி சாலைகள் மற்றும் 30 அடி சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால் பைபாஸ் சாலை பணிகள் முடிந்த பிறகு, மேற்படி நகரில் வசிப்பவர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ள சிடிஎச் சாலையை அணுக முடியாத நிலை உள்ளது.
எனவே பைபாஸ் சாலையில் சுரங்கப்பாதை அல்லது சர்வீஸ் சாலை அல்லது அணுகு சாலை எதுவும் இல்லாததால் இப்பகுதி மக்களுக்கு மிகுந்த சிரமமாக இருக்கிறது. எனவே சிடிஎச் சாலையினை அணுக பைபாஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்றும் அல்லது கந்தன் கொள்ளையில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலத்திற்கு அணுகும் சாலை அல்லது சர்வீஸ் ரோடு அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.