கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜ 66 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களையும் பிடித்தன. அறுதிப்பெரும்பான்மையோடு காங்கிரஸ் யானை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவச திட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆட்சி அமைதியாக நடந்து வருவதை விரும்பாத பாஜ, மதசார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சிக்கு எதிராக சதி திட்டம் தீட்டி வருகிறது.
பாஜவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா கூறினாலும் அவரது மகனும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி பாஜவை அனுசரித்து ஆளும் காங்கிரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிக்கடி வெளியிட்டு அச்சுறுத்தி வருகிறார். பாஜவில் இதுவரை எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. கர்நாடக சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் எதிர்க்கட்சி தலைவர் இல்லாமலேயே நடந்து முடிந்துள்ளது மாநில வரலாற்றில் முதன் முறையாகும்.
பாஜவில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பலர் போட்டியில் உள்ள நிலையில், அக்கட்சி தேசிய மேலிடம் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்த்து குமாரசாமியை எதிர்க்கட்சி தலைவராக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் தான் இதுவரை எதிர்க்கட்சி தலைவராக யாரும் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தில் கோடி கோடியாக காங்கிரஸ் அமைச்சர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்று குமாரசாமி கொளுத்தி போட்டார். இதற்கான ஆவணம் ‘பென் டிரை’வில் இருப்பதாக கூறினார்.
கர்நாடகாவில் வெளிப்படைத்தன்மை ஆட்சி நிலவுவதை உறுதி செய்ய வேண்டும். அதிருப்தி எம்எல்ஏக்களுடன் அமைச்சர்கள், கட்சி தலைமை அடிக்கடி பேசி அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் ஆட்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கியது. ஆனால் முன்னாள் முதல்வர் குமாரசாமி அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுவிடுவது தான் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளிநாட்டில் இருந்தபடி காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு வலை வீசுகிறார் என்று கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் பாஜ தலைவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் சமீபத்தில் வேளாண் துறை அமைச்சர் மீது லஞ்சப்புகாரை அத்துறை இயக்குனர்களே எழுப்பி ஆளுநருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்க்கட்சிகளின் சதி என்று அமைச்சர் மறுத்தாலும், உண்மையை வெளியே கொண்டுவரும் வகையில் முதல்வர் சித்தராமையா சிஐடி விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீது பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் 15 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இவர்களும் ஆளுநரை சந்தித்து புகார் அளித்துள்ளனர். இதையெல்லாம் பின்னணியில் இருந்து எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் இயக்குவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசலை வளரவிட்டு அதன்மூலம் அதிருப்தி எம்எல்ஏக்களை அபகரிக்க பாஜ, மஜத இணைந்து சதுரங்க வேட்டைக்கு தயாராகி வருவதால் காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.