சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சியில் ரூ.300 கோடி காசோலைகள் (செக்) வங்கியில் சமர்ப்பித்து பணமாக்கப்படாமல் இருந்துள்ளது, என்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில், கணக்கு நிலை குழு தலைவர் தனசேகர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். சென்னை மாநகராட்சி கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் பிரியா தலைமை வகித்தார். துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்னைகளை தீர்த்து வைப்பது குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு மேயர் பிரியா பதிலளித்து பேசினார்.
இதை தொடர்ந்து நேரமில்லா நேரம் தொடங்கியது. இதில் கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகர் பேசியதாவது: சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 662 கட்டிடங்களில் ரூப் டாப் சோலார் பவர் பிளான்ட் அமைத்து இயக்கும் பணிக்கு ரூ.15.91 கோடி நிதி 3 நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு கிடைக்கும் மானியம் சுமார் ரூ.4.97 கோடி ஒன்றிய அரசிடமிருந்து பெற்று மாநகராட்சி நிதியில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், பணிகள் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சேர்க்கப்படவில்லை.
சென்னை மாநகரில் 3000க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களுக்கான சொத்து வரி நிலுவை தொகை ரூ.125 கோடி, நீதிமன்ற வழக்கின் காரணமாக வசூலிக்கப்படாமல் உள்ளது. இதை சிறப்பு குழு அமைத்து வழக்கை விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில், நூலக வரி சுமார் ரூ.239 கோடி, மாவட்ட நூலக ஆணைக்குழுவுக்கு செலுத்தவில்லை. இந்த தொகையை நூலக ஆணையத்துக்கு செலுத்தாமல் முடக்கி வைக்கும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது என்பதை விசாரணை நடத்தி இந்த நிதி வேறு பயன்பாடுக்கு உட்படுத்தப்பட்டதா, அதற்கான அரசாணை உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.
இதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று கடந்த அதிமுக ஆட்சியில், ஒவ்வொரு நிதியாண்டும் ஒன்றிய கணக்கு குழுமத்தால் பராமரிக்கப்படும் மாநகராட்சி இருப்பு தொகையையும் சம்பந்தப்பட்ட வங்கியின் இருப்பு தொகையுடன் தணிக்கை குழு இணக்கம் செய்யும் போது வங்கிகளில் சமர்ப்பிக்கப்படாத காசோலைகளால் ரூ.300 கோடி வித்தியாசம் கண்டறியப்பட்டுள்ளது. இதை உடனடியாக நேர் செய்யும் நடவடிக்கையை ஆணையர் மேற்கொள்ள வேண்டும்.
90 நாட்களில் காலாவதியாகக் கூடிய காசோலைகளை ஏன் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நேரத்தில் வங்கிகளில் சமர்ப்பித்து பணமாக்க ஏன் தவறுகிறார்கள். இதுகுறித்து ஆய்வு செய்து, வேறு ஏதும் தவறுக்கு உடந்தையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிந்து இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காசோலைகளுக்கு உண்டான பணத்தை வசூல் செய்தாலே மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும். இதில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதிலளித்து மேயர் பிரியா பேசுகையில், ‘‘சோலார் ஒப்பந்தம் எலக்ட்ரானிக் துறையின் கீழ் வருகிறது. இது குறித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் இன்னும் வரவில்லை. கணக்கு துறை வருவாய் துறையின் கீழ் வருகிறது. எனவே இது தொடர்பாக மாநகராட்சியும், வருவாய் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
* தனியார் ஆக்கிரமிப்பு
10வது மண்டலம் 28 வது வார்டில் ஆற்காடு சாலை வன்னியர் தெரு சந்திப்பில் 23 ஆயிரத்து 680 சதுர அடி மாநகராட்சி இடத்தை தனியார் ஆக்கிரமித்து உள்ளார். அதை அகற்றி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள அம்மா அரங்கத்தில் உள்ள உள் அரங்கத்திற்கு கலைஞர் அரங்கம் என பெயர் சூட்ட வேண்டும்.