சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் மாதம் 4வது வாரத்தில் நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கப்படாததால், மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது. சுமார் 55 ஆயிரம் மாணவ-மாணவிகள் பட்டங்களை பெற காத்திருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் துணைவேந்தர் இல்லாததால், பட்டமளிப்பு விழா நடத்த முடியாமல் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள், அந்த பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தொடங்குமாறு, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி அறிவுறுத்தியதாக அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகம் அதற்கான செயல்முறைகளை தொடங்கியுள்ளது. அந்தவகையில் பட்டம் பெற உள்ள ஆராய்ச்சி மாணவர்கள் அதற்கான கட்டணத்தை பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக வருகிற 14ம் தேதிக்குள் (சனிக்கிழமை) செலுத்த வேண்டும் எனவும், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா செப்டம்பர் 4வது வாரத்தில் நடைபெறும் எனவும் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த தேதி என குறிப்பிட்டு வெளியாகவில்லை.