சென்னை: சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 973 வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் 953, மூன்று சக்கர வாகனங்கள் 11 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 9 என மொத்தம் 973 வாகனங்கள் சென்னை, புதுப்பேட்டை காவல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது இவ்வாகனங்கள் வருகிற 26-ம் தேதி காலை 10.00 மணியளவில் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
பகிரங்க ஏலத்திற்கான முன்பதிவு 19.03.2025 மற்றும் 20.03.2025 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் 2 மணி வரை சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. அடையாள அட்டை மற்றும் ஜி.எஸ்.டி. பதிவெண் சான்றுடன் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர். 26-ம் தேதி காலை 10 மணியளவில் முன்பணம் செலுத்தி பதிவு செய்த எலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலம் தொகை மற்றும் ஜி.எஸ்.டி. தொகையினை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.