தண்டையார்பேட்டை: தென் கொரியாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு ஆயில் ஏற்றி வந்த கப்பலில் பணியாற்றிய மியான்மர் நாட்டை சேர்ந்தவர் திடீர் மாரடைப்பால் இறந்தார். வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு ஆயில் கொண்டு வரப்படுவது வழக்கம். அதன்படி, தென்கொரியா நாட்டை சேர்ந்த ஜி.பி.ரைட் என்ற எண்ணெய் கப்பல் நேற்று சென்னை துறைமுகம் வந்தது. அந்த கப்பலில் பணிபுரிந்த மியான்மர் நாட்டை சேர்ந்த அங்கோ லாட் (40) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து துறைமுகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், அங்கோ லாட் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு, எண்ணெய் கப்பல் நிறுவன ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். அவரது உடலை சொந்த நாட்டிற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து துறைமுகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.