சென்னை: சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே உயர்மட்ட பறக்கும் சாலை திட்டம் கடந்த 2009ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டது. கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி துறைமுகத்திற்கு விரைவாக சென்று வர இத்திட்டம் துவங்கப்பட்டது. இதன் மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், இந்த பறக்கும் சாலை பணிகளில் ஒரு பகுதியாக, கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கும் திட்டம் இருந்ததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் கூறி இத்திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன் பிறகு 10 ஆண்டுகள் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, 2021ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்று பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகளால் உயர்மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவை இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்புகளும் வெளியானது. ஆனால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டது. முதலில் இந்த திட்டம் ரூ.3,204 கோடியில் செயல்படுத்த முன்மொழியப்பட்டது. இந்த உயர் மட்ட பாலம் இரண்டு நிலைகளாக அதாவது டபுள் டக்கர் மறுவடிவமைப்பு செய்யப்பட்டதால் இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.5,721.33 கோடியாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த மேம்பால பணிகள் 4 பகுதிகளாக பிரித்து செயல்படுத்தப்படும் எனவும், இதன் மொத்த நீளம் 20.565 கிலோ மீட்டர் எனவும் முன்மொழிபட்டு சுற்றுச்சூழல், ரயில்வே துறை மற்றும் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் இருந்து அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் வரையிலான உயர்மட்ட பாலத்தில் ஒரு பகுதி இரட்டை தளமாக அமைக்கும் பணி இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, அனைத்து நெடுஞ்சாலை பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.