சென்னை: பணியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த கொளத்தூர் உதவி கமிஷனர் சிவகுமார் உடலுக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதல்வர் அறிவித்த ரூ.25 லட்சம் நிவாரண தொகையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். சென்னை பெருநகர காவல் துறையில் கொளத்தூர் உதவி கமிஷனராக சிவகுமார் (53) பணியாற்றி வந்தார். இவர் கார் பந்தய நிகழ்ச்சிகாக நேற்று முன்தினம் அண்ணாசாலை மன்றோ சிலை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த போலீசார் உதவி கமிஷனர் சிவகுமாரை மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியின்போது உயிரிழந்த உதவி கமிஷனர் சிவகுமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு இல்லாமல் ரூ.25 லட்சம் நிவாரண நிதி விழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் உதவி கமிஷனர் சிவகுமார் உடல் அவரது வீடான அம்பத்தூர் ஒரகடம் அய்யா தெருவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை மற்றும் சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உயிரிழந்த உதவி கமிஷனர் சிவகுமார் உடலுக்கு நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். அப்போது சிவகுமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, முதல்வர் அறிவித்த ரூ.25 லட்சம் நிவாரண தொகையை வழங்கினார். அதனை தொடர்ந்து உயிரிழந்த சிவகுமார் உடல் நேற்று மாலை முழு அரசு மரியாதை மற்றும் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.