சென்னை: சென்னை நகரை சுற்றியுள்ள நீர்நிலைகளில் பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னை நகரை அழகுப்படுத்தவும், பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அந்த வகையில் மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே நகரின் பல்வேறு பகுதிகளில் பொழுதுபோக்கு மையங்களை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏரிகள் போன்ற நீர்நிலை பகுதிகளில் உள்ளூர் பொழுதுபோக்கு மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது வில்லிவாக்கம் ஏரியின் இரண்டாம் கட்ட சுற்றுசூழல் புனரமைப்பு திட்டம் 27.5 ஏக்கருடன் கூடுதலாக 8.5 ஏக்கரில் தொடங்கப்பட்ட நிலையில், அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை கவரும் வகையில் கொரட்டூர், ரெட்டேரி, பெருங்குடி மற்றும் போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் பொழுதுபோக் மையங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாமல்லபுரம், மெரீனா கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்லாமல், மக்கள் தங்கள் பகுதியிலேயே பொழுது போக்குவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் போதுமான இடங்கள் இருப்பதை உறுதி செய்வதில் மாநகராட்சி உறுதிபூண்டுள்ளது. எனவே பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஏரிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. நீர் நிலைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் வில்லிவாக்கம் ஏரியில் கூடுதல் நீர் பரப்பு பகுதியையும் உருவாக்கவுள்ளோம்.
வில்லிவாக்கம் ஏரியை இரண்டு கட்டங்களாக திறக்க திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக புதுப்பிக்கப்படும் ஏரி, தொங்கு பாலம் திறக்கப்படும். குஜராத்தில் நடந்த சம்பவம் நடக்காமல் இருக்க போதுமான பாதுகாப்புடன் மக்களுக்காக திறக்கப்படும். குழந்தைகளுக்கான பிற பொழுதுபோக்கு பகுதிகள் மற்றும் திறந்தவெளி தியேட்டர் பகுதிகள் பின்னர் திறக்கப்படும். பிரதான சாலையில் இருந்து வில்லிவாக்கம் ஏரிக்கு மக்கள் செல்ல ஏதுவாக பாதைகள் அமைக்கும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
வில்லிவாக்கம் தவிர, போரூர் ஏரி தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அழகான கண்காணிப்பு கோபுரம், ஒரு பெரிய நடைபாதை ஆகியவற்றைக் கொண்டிருக்கும், இது சுற்றுச்சூழலுக்கு இணக்கமான சுற்றுலாத் தலமாக மாறும். அனைத்து பகுதிகளிலும், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்விடத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை மாநகராட்சி உறுதி செய்யும். கொரட்டூர், ரெட்டேரி போன்ற பெரிய ஏரிகளை புனரமைக்க நீர்வளத்துறையுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.