சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புற நிதிப் பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை மணி ஒலித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி நகர்ப்புற நிதி பத்திரங்கள் மூலம் உட்கட்டமைப்பு திட்டத்திற்கு நிதி திரட்டியது ஒரு முக்கிய நிகழ்வாகும். பெருநகர சென்னை மாநகராட்சி 10 ஆண்டு காலத்திற்கு, ஆண்டுக்கு 7.97% என்ற மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் 200 கோடி ரூபாய் நகர்ப்புற நிதி பத்திரங்களை வெற்றிகரமாக திரட்டியது. 2025ம் ஆண்டில் இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்ட நகர்ப்புற நிதி பத்திர வெளியீடுகளிலும் இதுவே மிகக் குறைந்த வட்டி விகிதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெளியீட்டுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி 100 கோடி ரூபாய் அடிப்படை வெளியீட்டு தொகையை விட 4.21 மடங்கு அதிகமாக, அதாவது ரூ.421 கோடி மதிப்பிலான ஏலங்கள் தேசிய பங்குச் சந்தையின் மின்னணு ஏலம் மூலம் பெறப்பட்டன. இது பெருநகர சென்னை மாநகராட்சியின் வலுவான நிதி மேலாண்மை மற்றும் திட்டத்தின் கட்டமைப்பிற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்த நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி, கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்பிற்கு பயன்படுத்தப்படும். இது சென்னையின் வெள்ளத் தடுப்பு மற்றும் நிலையான நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட முக்கியமான உட்கட்டமைப்பு திட்டமாகும்.
கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் 8 பெரிய ஏரிகளும், 71 சிறிய நீர்நிலைகளும் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டுமானம் 46 தொகுப்புகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 22.05.2025 அன்றைய நிலவரப்படி, 30 தொகுப்புகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 16 தொகுப்புகளுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் நீர் சேமிப்பு திறனை இரட்டிப்பாக்கி, பருவமழையின்போது மழைநீர் தேக்கத்தை தடுக்கவும், கோடைக்காலத்தில் நீர் பற்றாக்குறையை சமாளிக்கவும் உதவுகிறது. மழைநீர் வடிகால்கள் அருகில் உள்ள ஏரிகளுடன் இணைக்கப்படுவதால், அதிகப்படியாக வெளியேறும் மழைநீர் சேமிப்பிற்காக ஏரிகளுக்கு திருப்பி விடப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற நிதிப் பத்திரங்களுக்கு இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் அக்யூட் ரேட்டிங்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ‘AA+’ என தரமதிப்பீடு செய்துள்ளன. இது பெருநகர சென்னை மாநகராட்சியின் சீரிய நிதி மேலாண்மையை எடுத்துக்காட்டுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் விதமாகவும் தமிழ்நாடு அரசு PSGF திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி உதவியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக, ஒன்றிய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நகர்ப்புற நிதிப் பத்திர வெளியீட்டு ஊக்கத்தொகையாக மாநகராட்சிக்கு ரூ.26 கோடி ஊக்கத்தொகையும் பெறப்படும். இது நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் மூலம் நிதியினை திரட்டும் செலவினை மேலும் குறைத்திட உதவும்.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புற நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் பட்டியலிடும் நிகழ்வை சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மணி ஒலித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பத்திர வெளியீட்டின் அனைத்து பங்கு முகவர்களுக்கும் முதல்வர் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏ எம்.கே.மோகன், துணை மேயர் மகேஷ்குமார், தலைமை செயலாளர் முருகானந்தம், தேசிய பங்குச்சந்தை தலைமை பொருளாதார வல்லுநர் தீர்த்தங்கர் பட்நாயக், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், முதலீட்டாளர்கள், பங்கு முகவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.