சென்னை: சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த அனைத்து துறை உயர் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முதன்மை செயலாளர்/சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர்/மேலாண்மை இயக்குநர் திருமதி.காகர்லா உஷா.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தீவுத்திடலில் கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 70 நாட்கள் இந்திய சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சியை நடத்தி வருகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி 4.1.2023 தொடங்கி 23.03.2023 வரை 73 நாட்கள் நடைபெற்ற பொருட்காட்சியில் அரசுத்துறைகளின் அரங்கங்கள் அமைக்கப்பட்டு, 8 லட்சத்து 30 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். மேலும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களும் இப்பொருட்காட்சியினை பார்வையிட்டு அரசின் ஆக்கபூர்வ பணிகளையும் மக்கள் நலனுக்காக செயல்படுத்தும் புதிய திட்டங்களையும் தெரிந்து கொண்டார்கள்.
இப்பொருட்காட்சியின் மூலம் பத்தாயிரம் பேர் நேரடியாகவும், முப்பதாயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த அனைத்து துறை உயர் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முதன்மை செயலாளர்/சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர்/மேலாண்மை இயக்குநர் திருமதி.காகர்லா உஷா.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (14.11.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடந்த 47 வது பொருட்காட்சியை விட அதிக பார்வையாளர்கள் வரும் வகையில் அனைத்து துறைகளும் தங்கள் அரங்கங்களை சிறப்பாக அமைப்பதுடன், அரசின் திட்டங்கள், விழிப்புணர்வு தகவல்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தேவையான பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் ஆர்வத்துடன் பணியாற்றிட வேண்டும் என்று முதன்மை செயலாளர்/சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர்/மேலாண்மை இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, பள்ளிகல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, சுற்றுலாத்துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.