சென்னை: சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிட வளாகத்தில் சென்னை தினத்தை முன்னிட்டு “அக்கம் பக்கம்” என்ற தலைப்பில் நடந்த புகைப்பட கண்காட்சி நிறைவு பெற்றதை தொடர்ந்து, கண்காட்சியில் இடம் பெற்ற புகைப்படங்களை எடுத்த சென்னை பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டி, மேயர் பிரியா நேற்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சென்னை போட்டோ பியனாலே அறக்கட்டளையின் மூலம் ஐபோன்களை பயன்படுத்தி ஆறு மாத கால புகைப்பட பட்டறைகளை மூன்று சென்னை பள்ளிகளில், புளியந்தோப்பு தொடக்கப்பள்ளி, பெரம்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நுங்கம்பாக்கம் ஸ்டெம் பள்ளியில் நடத்தியது. இதில், 65 மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, புகைப்படங்களை எடுத்தனர்.
தொடர்ந்து சென்னை பள்ளி மாணவ, மாணவியர்கள் எடுத்த புகைப்படங்கள் “அக்கம் பக்கம்” என்ற தலைப்பில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் புகைப்பட கண்காட்சியாக முதல்வரால் கடந்த 22ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி 10.9.2023 அன்று நிறைவு பெற்றதை தொடர்ந்து அதில் இடம்பெற்ற புகைப்படங்களை எடுத்த சென்னை பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டி, மேயர் பிரியா நேற்று ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். நிகழ்வில், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, கல்வி அலுவலர் வசந்தி, சென்னை போட்டோ பியனாலே அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.