சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்பு வாகனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவைகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மற்றும் கள ஆய்வு நடத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். இதை தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதேபோல், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோரும் ஆய்வு கூட்டங்கள் நடத்தி, களப்பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அதோடு, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம், லாயிட்ஸ் காலனி உர்பேசர் சுமீத் பணிமனை வளாகத்தில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சியின் வாகனங்கள், மீட்பு உபகரணங்கள், மர அறுவை இயந்திரங்கள், மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பேரிடர் மீட்பு வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையின்போது, தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை அகற்றுவதற்காக உயர்திறன் கொண்ட டீசல் இன்ஜின் மோட்டார் பம்புகள், எலக்ட்ரிக்கல் நீர் மூழ்கி மோட்டார் பம்புகள், அதிக குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்புகள், டிராக்டர்களுடன் கூடிய மோட்டார் பம்புகள் என 845 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் வாகங்களுடன் கூடிய மர அறுவை இயந்திரங்கள், கையினால் மேற்கொள்ளப்படும் மர அறுவை இயந்திரங்கள், டெலஸ்கோபிக் புருனர், கார்பேஜ் சக்கர் வாகனங்கள், ஆம்பிபியன் சூப்பர் சக்கர் வாகனங்கள், பொக்லைன் இயந்திரங்கள், பாப்காட் இயந்திரங்கள், ரோபோடிக் பல்வகை பயன்பாடு இயந்திரங்கள் உள்ளிட்ட 446 பேரிடர் மீட்பு வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முழு விழிப்புணர்வுடன் பணியாற்றிட உத்தரவிடப்பட்டள்ளது. மழை பாதுப்பு இருந்தால், பொதுமக்கள் மாநகராட்சியில் புகார் அளிக்கலாம். அதன்பேரில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவுற்றவுடன் சாலை சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கி நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க பெற்று போக்குவரத்துக்கு இடையூறின்றி இருக்கும் நிலையினை அதிகாரிகள் உறுதி செய்திட வேண்டும். வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு நீர்நிலைகள் மற்றும் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்பட்டு மழைநீரினை சேகரிப்பதற்காக தயார் நிலையில் வைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரி மழைநீர் தடையின்றி செல்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மழைகாலங்களில் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு முகாம்களை கண்டறிந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பருவமழையின்போது அனைத்து பணியாளர்களைக் கொண்ட குழுக்கள் அமைத்து பேரிடர் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, தலைமை பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன், கண்காணிப்பு பொறியாளர் ராஜேஸ்வரி, உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மெஹ்மூத் செயட் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.