சென்னை: சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்க நீண்ட நாள்களாக எழுந்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்திலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், ரயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரயில் நிலையங்களில் புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க முதற்கட்டமாக 9 இடங்களை சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் தேர்வு செய்துள்ளது. முதல் கட்டமாக சென்னையில் 15 மண்டலங்களில் தலா ஒன்று என்ற அடிப்படையில் 9 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதால் இதனை இலவசமாக வழங்க திட்டமிடப்படவில்லை. ஆனால், காலப்போக்கில் இதற்கான அவசியம் கருதி திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ளன அதன்படி,பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவில் பார்க்கிங், பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங், அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங், தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங், தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம், செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு, மெரினா கடற்கரை பார்க்கிங், அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா, மயிலாப்பூர், நாகேஸ்வரா ராவ் பூங்கா. சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.